» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனியாவது மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும்: கனிமொழி எம்பி

திங்கள் 10, பிப்ரவரி 2025 5:24:49 PM (IST)

இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூரில் கும்பல் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த பிரேன் சிங் முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகியுள்ளார்.

குறிப்பாக மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள முதல்-மந்திரி, அதற்கு மாறாக கும்பல் வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கான சாட்சியங்கள் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளிப்பட்டுள்ளன. சிறுபான்மைப் பிரிவினர் மீது வெறுப்புணர்வோடு பேசிய ஒலிப்பதிவு அம்பலப்பட்டு, அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ள நிலையில் பிரேன் சிங் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பிரேன் சிங் முதல்-மந்திரியாக தொடர எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தந்த அழுத்தமும் இந்த பதவிவிலகலுக்கு காரணமாகியிருக்கின்றன. மணிப்பூர் கலவரங்கள் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும், பிரதமர் மோடியும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. மணிப்பூர் மக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி வந்தார்கள். தற்போதும் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை.

மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, 60,000 க்கு மேற்பட்ட மக்கள் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த அவலம் ஏற்பட்டது. அரசின் நிவராண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள். அரசின் ஆதரவிலும் பாராமுகத்திலும்தான் இந்த கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. 

அப்போதும் மத்திய பாஜக அரசும், மணிப்பூர் பாஜக முதல்-மந்திரி பிரேன் சிங்கும் வேடிக்கைத்தான் பார்த்தார்கள். மக்களை பிளவுபடுத்தி அவர்களின் மரணத்தின் மீது ஆட்சிசெய்யும் பாஜகவின் பாசிச அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி. பிரேன் சிங் மட்டுமல்ல அவரை பாதுகாத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

அடுத்து யார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும் அவர்கள் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

என்னதுFeb 11, 2025 - 05:55:36 PM | Posted IP 172.7*****

இலங்கைல போய் தமிழர்களை கொன்னுட்டு வந்து பேசுற மாதிரியா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory