» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திமுக எம்.பி.யை தடுத்து நிறுத்திய விவகாரம்: மன்னிப்பு கோரியது சிஐஎஸ்எஃப்!

வியாழன் 20, ஜூன் 2024 11:34:49 AM (IST)

நாடாளுமன்றத்துக்குள் திமுக எம்.பி. முகமது அப்துல்லாவை தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார். 

புதுக்கோட்டையை சேர்ந்தவரும் மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான எம்.முகமது அப்துல்லா செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) பிற்பகலில் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் சென்றார். அவர் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக மின்கல வாகனத்தில் தால்கடோரா சாலை நுழைவு வாயில் வழியாக (டிகேஆர் - 2) செல்லும்போது, பூம் தடுப்புக்கு (மின்னணு முறையில் மேலே கீழே இயங்கும் தடுப்பு) முன்பாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, அவர் அடையாள அட்டையைக் காட்டினார்.

இந்த நிகழ்வு குறித்து குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு முகமது அப்துல்லா எழுதிய புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாடாளுமன்றத்துக்கு நான் செல்லும்போது சிஐஎஸ்எஃப் காவலர்கள் என்னை தடுத்து கேள்வி கேட்டனர். மக்களையும், தமிழக நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமான நாடாளுமன்றத்துக்கு நான் சென்றதன் நோக்கம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எஃப் வீரர்களின் நடத்தையால் நான் திகைப்படைந்தேன்.

நாடாளுமன்றத்தில் முன்பு நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஸ்) பொறுப்பில் இருந்தபோது இதுபோன்று தவறான நடத்தைகள் ஏற்பட்டதில்லை.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்றாலும், அதிகாரபூர்வமான நிகழ்ச்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் தவறான நடத்தையை மேற்கொண்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகலை மாநிலங்களவைச் செயலகத்துக்கு திமுக எம்.பி. முகமது அப்துல்லா அனுப்பினார். இதைத் தொடர்ந்து உடனடியாக மாநிலங்களவைச் செயலர் நடவடிக்கை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட சிஐஎஸ்எஃப் காவலர் விசாரிக்கப்பட்டார். மேலும், சிஐஎஸ்எஃப் துணை கமாண்டன்ட் மணி பாரதியும் முகமது அப்துல்லாவை தொடர்புகொண்டு நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கோரினார்.

காங்கிரஸ், திரிணமூல் கண்டனம்: இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்கு நாடாளுமன்றத்தை அடிபணியச் செய்வது என்பது நமது அரசமைப்புச் சட்டம் மீதான தாக்குதலாகும்.

தேசிய அரசியல் பிரதிநிதிகள் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்படைந்ததற்கு மத்தியில் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடந்துள்ளது. நாடாளுமன்றப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அபகரித்ததை அனுமதிக்க முடியாது' எனக் குறிப்பிட்டிருந்தார். திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி. சாகேத் கோகலேவும் இதுதொடர்பாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

பின்னணி என்ன?: நாடாளுமன்றத்துக்கு வெளியே சிஆர்பிஎஃப் படையினரும், உள்ளே பிஎஸ்எஸ் என்கிற நாடாளுமன்றப் பாதுகாப்பு சேவைப் பிரிவும் (தில்லி போலீஸில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்) பாதுகாப்பில் இருந்தனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள், புதியவர்களை தங்கள் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் அடையாளம் காணக்கூடியவர்கள் இவர்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு நாளில் மக்களவைக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்துக்கு பின்னர் நாடாளுமன்றப் பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டது. நாடாளுமன்றப் பாதுகாப்பில் இருந்த சிஆர்பிஎஃப், பிஎஸ்எஸ் பிரிவினர் படிப்படியாக விலக்கப்பட்டு கடந்த மே 15-ஆம் தேதிமுதல் 3,317 சிஐஎஸ்எஃப் படையினர் நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த மே 20 -ஆம் தேதி மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நாடாளுமன்ற நிகழ்வுக்குச் சென்றபோது, அவரிடம் அடையாள அட்டையை சிஐஎஸ்எஃப் படையினர் கேட்டனர். அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோன்ற விவகாரங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதையடுத்து, "நாடாளுமன்றப் பாதுகாப்பில் சிஐஎஸ்எஃப் படையினருடன், எம்.பி.க்களை அடையாளம் காண அனுபவமுள்ள பாதுகாவலர்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மூத்த எம்.பி.க்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory