» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரசிகரை கொன்று சாக்கடையில் வீசிய வழக்கில் நடிகர் தர்ஷன், தோழியுடன் கைது

புதன் 12, ஜூன் 2024 4:48:02 PM (IST)

தன் தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொடூரமாக அடித்து கொன்று, உடலை சாக்கடை கால்வாயில் வீசிய வழக்கில், பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சும்மனஹள்ளி பகுதியில் ஓடும் சாக்கடை கால்வாயில் கடந்த 9ம் தேதி ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்திற்கு வந்த 3பேர், சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தவர், சித்ரதுர்கா டவுனை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்றும், பணத்தகராறில் அவரை கொன்று உடலை கால்வாயில் வீசியதாகவும் கூறி சரண் அடைந்தனர்.

அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதை அடுத்து, பிரபல கன்னட நடிகர் தர்ஷன், 47, கூறியதால், ரேணுகாசாமியை அடித்து கொன்றதாக தெரிவித்தனர். படப்பிடிப்புக்காக மைசூரில் தங்கியிருந்த தர்ஷனை நேற்று முன்தினம் இரவே போலீசார் கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: நடிகர் தர்ஷனுக்கு சில ஆண்டுகளுக்கு முன், விஜயலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்திபதிக்கு ஒரு மகன் உள்ளார். தர்ஷனுக்கும், நடிகையும், மாடலுமான பவித்ரா கவுடா இடையே, பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உள்ளது. பவித்ராவை, தர்ஷனின் இரண்டாவது மனைவி என்றும் சிலர் சொல்வது உண்டு.

சில மாதங்களுக்கு முன், தர்ஷனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பவித்ரா கவுடா, 'ஒரு தசாப்தம் முடிந்து விட்டது. இன்னும் தொடரலாம், நன்றி' என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். தர்ஷனின் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பவித்ராவின் இன்ஸ்டாகிராமிற்கு, தர்ஷனின் ரசிகரான ரேணுகாசாமி, தொடர்ந்து ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார். பவித்ரா, தன் உதவியாளரான வினய் என்பவரிடம் இது குறித்து கூறி உள்ளார். ரேணுகாசாமி, சித்ரதுர்காவை சேர்ந்தவர் என்பதை அறிந்த வினய், சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ரகுவிடம் பேசியுள்ளார்.

கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை சந்தித்த ரகு, அவரை பெங்களூரு ஆர்.ஆர்.நகருக்கு காரில் கடத்தி வந்தார். ஆர்.ஆர்.நகர் பட்டனகெரேயில் உள்ள ஒரு ஷெட்டில் வைத்து ரேணுகாசாமியை, வினய், ரகு, தர்ஷனின் மேலாளர் நாகராஜ், தர்ஷன் ஆதரவாளர்கள் மற்றும் பவுன்சர்கள் என 11 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின், தர்ஷனும், பவித்ராவும் வந்துள்ளனர். தர்ஷனும், தான் அணிந்திருந்த பெல்டால், ரேணுகாசாமியை தாக்கியதுடன், மர்ம உறுப்பில் மிதித்துள்ளார். அதன்பின் தர்ஷனின் ஆதரவாளர்கள், பவுன்சர்கள் தொடர்ந்து கண்மூடித்தமாக தாக்கியதில், ரேணுகாசாமி இறந்தார். அவரது உடலை காமாட்சிபாளையாவுக்கு காரில் எடுத்து சென்று, சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.

இந்த வழக்கில் பவித்ரா முதல் குற்றவாளி, தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான தர்ஷன், பவித்ரா உட்பட 13 பேரையும் ஆறு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory