» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு: காவல்துறை தீவிர விசாரணை!

திங்கள் 15, ஏப்ரல் 2024 12:18:06 PM (IST)



மும்பையில் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய 2பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

பான்வெல் பகுதியிலிருந்து இவ்விரு குற்றவாளிகளும் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நபரிடமிருந்து, சம்பவத்தில் ஈடுபட்டபோது பயன்படுத்திய பைக்கை வாங்கிக் கொண்டு மும்பை வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த போது, வழக்கமாக சல்மான் கான் வீட்டு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரும், அவர்கள் இருக்கும் வாகனமும் இல்லை என்பதும், இதனை அறிந்தே குற்றவாளிகள் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்துக்கு வெளியே நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு முறை சுட்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 307-ஆவது பிரிவின் (கொலை முயற்சி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சல்மான் கான் வீட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீஸார் கண்டெடுத்தனர். அது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் ஓட்டி வந்ததாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்துக்கு உள்ளூர் போலீஸார், குற்றப் பிரிவு காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சென்று தடயங்களைச் சேகரித்தனர். சல்மான் கான் வீட்டுக்கு அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை அவர்கள் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சல்மான் கானை மிரட்டும் வகையிலான இ-மெயில் அவரது அலுவலகத்துக்கு வந்தது. இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், மற்றொரு நபர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நடந்திருக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் விஷால் என்கிற காலு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோஹித் கோடாராவுக்காக வேலை செய்பவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory