» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமல்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

செவ்வாய் 12, மார்ச் 2024 11:27:23 AM (IST)

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தபோராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் சட்டத்தின் விதிகளை வரையறுப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. இவை தற்போதும் நிலுவையில் உள்ளன.

மேலும், 2019-ம் ஆண்டில் அசாமில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ‘‘இந்த சட்டத்தால் வங்கதேசத்தினருக்கு எளிதாக குடியுரிமை கிடைத்துவிடும். இது அசாம் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். எனவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்த கூடாது’’ என்று அந்த மாநில மக்கள் வலியுறுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory