» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காலையில் ராஜினாமா... மாலையில் பாஜக ஆதாரவுடன் முதல்வரானார் நிதிஷ் குமார்!

ஞாயிறு 28, ஜனவரி 2024 7:42:58 PM (IST)



மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மாலையில் பாஜக ஆதாரவுடன் 9-வது முறையாக பிஹார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 

பிஹார் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிதிஷ் குமார் பதவி ஏற்ற போது பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் பாரத் மாதாகி ஜே என்றும் முழக்கமிட்டனர். நிதிஷ் குமாருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களில் 3 பேர் பாஜகவையும், 3 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், ஒருவர் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) கட்சியையும் சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்எல்ஏ. பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்தரி, விஜய குமார் சின்ஹா, பிரேம் குமார், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார், ஹிந்துஸ்தானி ஆவோம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) கட்சியின் தலைவர் சந்தோஷ் குமார் சுமன், சுயேட்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

முன்னதாக, பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிஹார் முதல்வர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். 

இண்டியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இண்டியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்" என தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராட் சவுத்ரி, "என் வாழ்வில் வரலாற்றுத் தருணத்தை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. 

கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், அரசில் பங்கு வகிக்க இருப்பதும் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கானது. லாலு யாதவின் பயங்கரவாதத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிஹாரில் காட்டாட்சி இருக்ககூடாது. 

அதற்கு முடிவு கட்ட வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது" என கூறினார். இதனையடுத்துப் பேசிய கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக இருந்து தற்போது துணைத் தலைவராக மாறி இருக்கும் விஜய் குமார் சின்ஹா, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் மீண்டும் ஆளுநரை நிதிஷ் குமார் சந்தித்தார். அவருடன், சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவர்கள், ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆகியோரும் சென்று ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏக்களின் கையொப்பம் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்து, தனக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரியிருந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார். தற்போது மெகா கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் இணைந்து முதல்வராகி உள்ளார். இரண்டு ஆண்டுகளில் நிதிஷ் குமார் இரண்டாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory