» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 25 கோடி பேரம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

ஞாயிறு 28, ஜனவரி 2024 10:07:59 AM (IST)

டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் பா.ஜனதா மீது முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்தநிலையில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஸ் சிசோடியாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஆம் ஆத்மிக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியது. அதனை அவர் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தனது அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதற்கு எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேரம் பேசப்படுவதாகவும் முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- டெல்லியில் எங்களது ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுகிறது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கை காட்டி எங்களை மிரட்டுகிறார்கள். அதில் என்னை (அரவிந்த் கெஜ்ரிவால்) கைது செய்யவும் முயற்சிகள் நடைபெறுகிறது.

இதை காரணம் காட்டி கடந்த சில தினங்களுக்கு முன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரிடம் சிலர் பேசியுள்ளனர். அவர்கள் தங்கள் தொடர்பில் இருப்பதாகவும் கூறினர். இந்தநிலையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரிடம் ‘அவர்கள்’ தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது உங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்களை கட்சியில் இருந்து விலகுமாறும் கூறியுள்ளனர்.

மேலும், ஆட்சி கவிழ்ந்த பிறகு தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடியும், பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட்டும் வழங்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால் அந்த 7 எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலக மறுத்துவிட்டனர். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க கடந்த 9 ஆண்டுகளில் பல முறை சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன, ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி நிருபர்களிடம் கூறுகையில், டெல்லியில் பா.ஜனதா ‘ஆபரேஷன் தாமரை 2.0’ திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியை கலைக்க அவர்கள் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டனர், ஆனால் தோல்வியடைந்தனர் என்று கூறினார்.

பா.ஜனதா மறுப்பு

இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து உள்ளது. இது தொடர்பாக டெல்லி பா.ஜனதா செயலாளர் ஹரிஷ் குரானா கூறியதாவது: இதற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பு கொண்டதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களிடம் பேசியவர்கள் யார் என்று கூற வேண்டும்.மதுபான ஊழல் விசாரணையில் அமலாக்கத்துறையின் சம்மன்களைத் தவிர்த்துள்ள கெஜ்ரிவால், அதனை திசை திருப்ப முயற்சிக்கிறார். இவ்வாறு ஹரிஷ் குரானா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory