» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ஞாயிறு 26, நவம்பர் 2023 10:44:19 AM (IST)

டி.வி. பெண் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட சவும்யா விஸ்வநாதன், டெல்லியில் ஒரு பிரபல ஆங்கில செய்தி சேனலில் நிருபராக வேலை பார்த்துவந்தார். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி அதிகாலை, வேலை முடிந்து காரில் சவும்யா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தெற்கு டெல்லியின் நெல்சன் மண்டேலா சாலையில் அவரது கார் வந்தபோது வழிப்பறி செய்வதற்காக சிலர் துரத்தினர். 

சவும்யா காரை வேகமாக ஓட்டிச்செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த அவர்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டனர். அதில் சவும்யா பரிதாபமாக பலியானார். இந்த படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார், அஜய் சேத்தி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டு, 5 பேரும் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார். அதன்படி, ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.

5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை மொத்தம் ரூ.12 லட்சத்தை சவும்யாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி, இது அரிதிலும் அரிதான வழக்கு என்ற பிரிவின் கீழ் வராது என்பதால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து கருத்து கூறிய சவும்யா விஸ்வநாதனின் தாயார் மாதவி, ‘தற்போது எனது கணவர் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். கோர்ட்டின் இந்த தீர்ப்பால் நான் திருப்தி அடைந்திருக்கிறேன். ஆனால் மகிழ்ச்சி அடையவில்லை’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory