தூத்துக்குடியின் வரலாறு (2 of 10)
பரவர்கள் (Paravas):
தூத்துக்குடியின் ஆதிகுடிகள் என்று அழைக்கப் படுகின்றவர்கள் "பரதவர்கள்". இவர்களது முக்கியத் தொழில் முத்துக் குளித்தலாகும். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்து இவர்கள் முத்துக்குளித்தல் தொழில் செய்ததாகவும், பாண்டிய மன்னரின் குடிகளாகவும் விளங்கியதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பிறகு வந்த சோழர்களும் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் அவர்களுக்கு வரி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
பிற்கால பாண்டியர்கள் காலத்தில் காயல்பட்டிணத்தில் வியாபாரம் செய்த "மூர்கள்" என்ற அரபியர்கள் பாண்டிய மன்னர்களுக்கு வேண்டிய குதிரைகளை வழங்கியதாகவும், அதற்கு பதிலாக முத்துக்கள் பெற்றுக் கொண்டதாகவும், பிறகு பாண்டிய மன்னர்கள் அரசாங்கத்தில் சில முக்கிய அங்கத்தினர்களாக இடம் பெற்று விளங்கியதாக கூறப்படுகின்றன. இவர்களில் சிலர் காயல்பட்டிணத்தில் திருமண உறவுகளை அங்கு இருந்தவர்களுடன் ஏற்படுத்தி நிரந்தர குடி மக்களாக மாறினர்.
இக்காலகட்டத்தில் வட இந்தியாவிலிருந்து டெல்லி சுல்தான் ஆலாவூதினின் படையெடுப்புகள் தென்னகத்தில் ஏற்பட்டது. ஆலாவுதினின் தளபதி மாலிக்கபூர் பாண்டிய மன்னர்களை தோற்கடித்து மதுரை சுல்தானியத்தை ஏற்படுத்தினான். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் மதுரையில் ஏற்படுத்தியதன் விளைவாக, காயல்பட்டிணத்தில் தங்கிய மூர்கள், பரவர்கள் நெடுங்காலம் தொட்டு செய்துகொண்டிருந்த முத்துக் குளிதல் தொழிலில் ஈடுபடலாயினர். இதனால் முத்துக்குளித்தலில் போட்டிகள் பிறகு சண்டைகள் ஏற்பட்டு பரவர்களை பல வகையில் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். இப்படியிருந்த சூழ்நிலையில்தான் போர்ச்சிகீசியர்களின் ஆதிக்கம் கொச்சியில் கிபி1502ல் ஏற்படுத்தப்பட்டன.
மூர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மறைபணியாளர் "மனுவேல் டி எளியாஸ்" என்பவரின் ஆலோசனைப்படி பரவர்களில் முக்கியமானவர்கள் என்று அழைக்கப்படும் "சாதி தலைவர்கள்" கொச்சினுக்கு சென்று அங்கு போர்ச்சிக்கள் கேப்டன் "Dr.பிடாரோ டி அமராலிடம்" தங்களின் குறைகளை முறையிட்டனர். போர்ச்சுக்கள் மன்னன் மூன்றாம் ஜானும் பரவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கட்டளைப் பிறப்பித்தான். போர்ச்சுக்கல் அரசு உதவி செய்ததால் பரவர்கள் கிறிஸ்துவ மதம் மாற சம்மதித்தனர்.
அதன்படி, கொச்சியிலிருந்து கேப்டன் "ஜோ பிதேலிஸ்" என்பவரின் தலைமையில் போர்ச்சிக்கல் படையொன்று தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டது. படையுடன் கோவாவின் பிஷப் "மைக்கேல் வாஸ்சும்" சேர்ந்து அனுப்பப்பட்டார்.