» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்: 72 சதவீதம் வாக்குப்பதிவு

புதன் 7, ஏப்ரல் 2021 11:41:50 AM (IST)

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற்று வருகின்றன. அசாமில் நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலுடன் அங்கு தேர்தல் பணிகள் முடிவுக்கு வந்தது. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர்.

கரோனா பரவலுக்கு இடையே தேர்தல் நடைபெற்றதால், சமூக இடைவெளியை வாக்காளர்கள் பின்பற்றும் வகையில், 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 லட்சத்து 29 ஆயிரம் எண்ணிக்கையில் வாக்கு எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் "விவிபாட்” எந்திரங்கள் 91 ஆயிரத்து 190 எண்ணிக்கையிலும் பயன்படுத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில், பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 58 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட 10,813 இடங்களிலும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட 537 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதிரடி படை போலீசாரும் ரோந்து சுற்றி வந்தனர். என்றாலும், பல இடங்களில் சிறு சிறு மோதல்கள் நடந்தன. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

மற்றபடி அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்து முடிந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வந்த தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. வெப்-கேமரா பொருத்தப்பட்டிருந்த 30 ஆயிரம் வாக்குச்சாவடி நிலவரங்களை அதிகாரிகள் அங்கிருந்தே கண்காணித்தனர். 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இணையதளம் மூலம் கேமரா இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அவற்றை இங்கிருந்தபடியே கண்காணித்தனர். மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவிடாமல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணி வரை எல்லா வாக்காளர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு கரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கரோனா நோயாளிகள் மத்தியில் வாக்களிக்க ஆர்வம் இல்லை என்றாலும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் கடமை உணர்வில் கவச உடையுடன் வந்து வாக்களித்தையும் காண முடிந்தது.

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து ஓட்டு எந்திரங்களும், கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பெரிய அறையில், தொகுதி வாரியாக ஓட்டு எந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டன. பின்னர், அறை கதவுகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளான மே2-ந் தேதி வரை இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அறை கதவுகளின் சீல் உடைக்கப்பட்டு, வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் இடங்களுக்கு கொண்டுவரப்படும். ஏற்கனவே, தபால் வாக்கு சேகரித்து வைக்கப்பட்ட பெட்டிகளும் அங்கு கொண்டுவரப்பட்டு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். அதன்பிறகு, சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். காலை முதலே முன்னணி நிலவரங்கள் வெளியாகும். மதியத்திற்குள் தேர்தவில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir Products

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory