» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்

வெள்ளி 1, ஜனவரி 2021 12:08:48 PM (IST)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் "பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, நேற்று (டிச. 31) கேரள சட்டப்பேரவையிலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சாலைகளிலேயே சமைத்து, அதை உண்டு, கடந்த 37 நாட்களாகத் தொடர்ந்து இரவும் பகலுமாக, பல லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்கள் டெல்லி தலைநகரில், திடமான, தீர்மான சிந்தையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத, கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது. முதன்முதலில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம்.

தங்களின் உணர்வுகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிரொலித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குத் தோளோடு தோள் நின்று துணைபுரிய வேண்டும் என்பது, நம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஆழ்ந்த விருப்பமாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய அந்த விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில், பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்; அதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டுமாறும்; அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Thalir Products

Black Forest Cakes


Thoothukudi Business Directory