» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதன் 16, டிசம்பர் 2020 11:47:40 AM (IST)

15 நாள் இடைவெளியில் 100 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர்  விலையைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்தால் ஏறத்தாழ 9 மாதங்களுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். 2020-ஆம் ஆண்டு முழுவதும் கரோனா பாதிப்பினால் பொருளாதார முடக்கம் - அன்றாட வாழ்க்கைக்கே சிக்கல் என ஏழை – எளிய - நடுத்தர வகுப்பினர் கடும் பாதிப்படைந்த நிலையில், பிறக்கின்ற புத்தாண்டிலாவது இயல்பு வாழ்க்கை வேகமாகத் திரும்பும் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய - மாநில அரசுகளுக்கு நிரம்ப உண்டு.

ஆனால், ஏழை - நடுத்தர வகுப்பினர் உள்பட அனைத்துத் தரப்பு மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல் – டீசல் - சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் பா.ஜ.க ஆட்சியில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப இவற்றின் விற்பனை விலை மாற்றப்படும் நிலையில், இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பெட்ரோல் - டீசல் விலை நாள்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டு, மிகப்பெரிய அளவில் விலையேற்றத்தைக் கண்டுள்ளது. இதனால் தனிநபர்களின் அலுவலக -வணிகப் பயன்பாடு, சரக்குப் போக்குவரத்துப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு, அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் காரணமாகிவிட்டது.  

வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் இந்த கொரோனா காலத்தில் மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. 2020 மே மாதம் ரூ.599.50 என உயர்ந்த சிலிண்டர் விலை, ஜூன் மாதத்திலும் ஜூலை மாதத்திலும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் 50 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டு, ரூ.660 என விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்களின் விலையை 15 நாட்களுக்குள்ளாக இரண்டாவது முறை மீண்டும் உயர்த்தி, கூடுதலாக ரூ.50 விலையில், ரூ.710-க்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகமாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக, இல்லத்தரசிகளான பெண்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி யிருக்கின்றனர். பழைய விலை இருந்த போது, சிலிண்டருக்குப் பதிவு செய்தவர்களுக்கும் புதிய விலைப்படியே சிலிண்டர் விநியோகம் என்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பேரிடர் சூழலில் புதிய புதிய விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதும் ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்புமாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThalir Products

Thoothukudi Business Directory