» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும்: எஸ்பி அறிவுரை
புதன் 10, மே 2023 10:11:19 AM (IST)
"நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும்" என தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கல்லூரி நாள் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 68வது கல்லூரி நாள் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளாகிய நீங்கள் வருங்காலங்களில் ஆசிரியர்களாக சமுதாயத்தில் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். அதனால் இப்போதே நீங்கள் நன்கு கல்வி பயின்று உங்களது இலக்கை சிறப்பானதாக மாற்றிக் கொண்டு அதற்காக இப்போதே உழைக்க வேண்டும்.
கோபத்தினால் ஒருவன் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்வதைவிட, தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன், அப்படிப்பட்ட உண்மையான வீரர்களை சமுதாயத்தில் உருவாக்குவதே வருங்கால ஆசிரியர்களாகிய உங்களது கடமையாகும். டாக்டர் அப்துல் கலாம் கூறியதுபோல ‘கனவு காணுங்கள்” என்பதற்கிணங்க நாம் என்னவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அதன்படி நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும்.
பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது தற்கொலை மட்டும் அல்ல. அப்பிரச்சினைகளை கண்டு பயப்படாமல் அதற்கான தீர்வுகளை மன தைரியத்தோடு அணுக வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும் என்று கூறி மாணவ மாணவிகள் வாழ்விலும், பணியிலும் சாதனை புரிய வேண்டும் என்று வாழ்த்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் மற்றும் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, இணை பேராசிரியர் ரசூல் முகைதீன் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.