» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

குரூப்-2 தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

செவ்வாய் 26, நவம்பர் 2019 11:55:34 AM (IST)

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ-ல் அடங்கிய பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சமீபத்தில் வெளியிட்டது.

முதல்நிலை தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து தேர்வு எழுதுவோரின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித் தாளாக நடத்தவும், அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அந்த மதிப்பெண், தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றபோதும், ஏற்கனவே இத்தேர்வுக்காக பழைய தேர்வுத்திட்டத்தின் படி தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள், குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுத் திட்டங்கள் குறித்து இணையதளம் மூலம் தேர்வர்களின் கருத்துகளை பெற டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி, கருத்துக்களை பதிவு செய்வதற்கான வினாப் பட்டியல் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in எனும் தேர்வாணைய இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு தொடர்பான வினாப் பட்டியல் ( Questionnaire for Combined Group 2 and 2A Exam ) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு (யூசர் ஐ.டி.) மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றை உள்ளடு செய்து வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரை பதிவு செய்யலாம். ஒருவர் ஒருமுறை மட்டுமே தங்கள் கருத்துக்களை ஆன்லைனில் பதிவு செய்ய இயலும் என்பதால் கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory