» சினிமா » செய்திகள்
வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
செவ்வாய் 22, நவம்பர் 2022 4:35:24 PM (IST)
வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்துள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெப் தொடராக ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வந்தார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்தார். வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பன் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக விஜேதாவும் நடித்தனர்.
காட்டுக்குள் வீரப்பனால் கடத்தி செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் நடித்தார். சத்திய மங்கலம் காடுகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் வீரப்பன் வெப் தொடருக்கு தடை விதிக்கக்கோரி அவரது மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வெப் தொடரை எடுக்க இடைக்கால தடை விதித்தது. இதனால் படப்பிடிப்பு நின்று போனது.
தற்போது வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாகவும் எனவே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார். வீரப்பன் முழு வாழ்க்கை சம்பவங்களும் வெப் தொடரில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.