» சினிமா » செய்திகள்

விக்ரம் படத்தின் வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை: கமல்ஹாசன்

சனி 18, ஜூன் 2022 12:01:02 PM (IST)விக்ரம் படத்தின் வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக்கொள்ளவும் மாட்டேன்" என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

விக்ரம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர். விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் "இந்தப் படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்ல முடியாது. சினிமா தெரிந்தவர்களுக்கு அது தெரியும். RKFI என்பது நான்கு எழுத்து என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதன் பின்னால் 40 பேர் இருக்கிறார்கள். முக்கியமாக மூன்றுபேர். அதில், சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். 

அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பியுள்ளார்கள். பெயர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சினிமாவில் வேலை கிடைத்தால் போதும் என வந்தவன் நான். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. ஆனால் நடிப்பை எனக்கு காட்டியவர் பாலசந்தர். 'ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் வாங்கி தரேன். நீ நடி. அப்புறம் பாரு' என்று அவர்தான் என்னை நடிக்க வைத்தார். அவர் படங்களில் மட்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்கள் செய்தால் போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொடுத்தார்கள்.

கடந்த பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இதுமட்டுமே. அதற்கு காரணம் மகேந்திரனும், உதயநிதி ஸ்டாலினும் தான். இவர்கள் உடன் இருந்ததால் தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்தாலும், அரசியலில் இருந்தாலும் பட விநியோகத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள் எனக் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால், இத்தனை நேர்மையோடு பட விநியோகத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சினிமா துறைக்கு அவசியம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி செய்யும்போது என்னை நிறைய பேர் கிண்டல் அடித்தார்கள். எனக்கு நெருக்கமானவர்கள்கூட என் கையைப் பிடித்து கொண்டு சின்னத்திரைக்கு செல்லாதீர்கள் என்றார்கள். ஆனால் அங்கு சென்றதன் பலன் என்னால் பல வீடுகளுக்கு செல்ல முடிந்தது. என்னுடைய ப்ரோமோஷன்கூட பிக் பாஸ்ஸில் தான் இருந்து ஆரம்பித்தது.

விக்ரம் வெற்றி எளிதாக வந்ததில்லை. அதனால் நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக்கொள்ளவும் மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அமர்ந்து வேலை செய்வோம். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory