» சினிமா » செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி

திங்கள் 21, மார்ச் 2022 12:11:53 PM (IST)



நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் 3 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் நேற்று எண்ணப்பட்டன. இதில் நடிகர் விஷால் அணியினர் வெற்றி பெற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டு களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகர் விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணி என்ற பெயரிலும், டைரக்டர் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரிலும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்த தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் ஓட்டுகளை எண்ண ஐகோர்ட்டு தடை விதித்தது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ஓட்டுகளை எண்ணலாம் என்று கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி ஆனது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளி வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு எண்ணிக்கை முடிவு மாலை அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,701 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 1,054 வாக்குகள் பெற்றார். இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1,720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற ஐசரி கணேஷ் 1,032 வாக்குகள் பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1,827 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து நின்ற பிரசாந்துக்கு 917 வாக்குகள் கிடைத்தன. துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1,612 வாக்குகளும், கருணாஸ் 1,605 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களை எதிர்த்து நின்ற குட்டி பத்மினி 1,015 ஓட்டுகளும், உதயா 973 ஓட்டுகளும் பெற்றனர். இதன் மூலம் ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகளே மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

குளறுபடி என புகார்

முன்னதாக பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்ததால்தான் ஓட்டு எண்ணிக்கை தாமதம் ஆனது. மீண்டும் ஓட்டு எண்ணுவது மகிழ்ச்சி. யார் பொறுப்பு ஏற்றாலும் 3 மாதத்துக்குத்தான் பதவி காலம் உள்ளது. மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.

தேர்தலில் நேரில் வந்து வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 1602. ஆனால் தலைவருக்கான ஓட்டு பெட்டியில் 1609 வாக்குகளும், செயலாளருக்கு 1605 வாக்குகளும், துணைத்தலைவருக்கு 1608 வாக்குகளும், பொருளாளருக்கு 1609 வாக்குகளும் இருந்தன. ஓட்டுகள் அதிகம் இருப்பது நியாயம் இல்லை. எண்ணிக்கையில் குளறுபடி உள்ளது என்று நாங்கள் சொல்லும்போதே ஓட்டுகளை எண்ண தொடங்கி விட்டனர். எனவே வெளியே வந்து விட்டோம். யார் ஜெயித்தாலும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வெண்டும்’’ என்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளன. நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நேற்று மாலை தெரியவந்த நிலையில், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் விஷால் இந்த வெற்றியை ஐதராபாத்தில் நடந்த லத்தி படப்பிடிப்பில் கொண்டாடினார். நடிகரும், தயாரிப்பாளருமான ரமணா முன்னிலையில் சக நடிகர்கள் கேக் வெட்டியும், விஷாலுக்கு மாலை அணிவித்தும் தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory