» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் கட்சியை கண்டுகொள்ளாத தமிழக மக்கள் : ஒரு இடத்தில் கூட வெற்றிபெற வில்லை!

புதன் 23, பிப்ரவரி 2022 4:17:20 PM (IST)

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக மக்கள் முற்றிலுமாக புறந்தள்ளி இருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட வெற்றிபெற வில்லை. 

தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மிக்க சிறந்த கலைஞனாக விளங்குபவர் கமல்ஹாசன். தனது நடிப்பால் இந்திய சினிமாவை மட்டுமன்றி உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். திரைப் பயணத்தை வெற்றியுடன் மேற்கொண்டு வந்த கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு அரசியல் பிரவேசம் செய்தார். மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கினார்.கமல்ஹாசன் எடுத்து வைத்த கருத்துக்கள், அவரது சிந்தனைகள் ஆகியவை மக்கள் மத்தியில் பெரிதாக முதலில் பேசப்பட்டது. 

ஊழலை ஒழிப்பது, கிராமப் புறங்களை மேம்படுத்துவது என கமல்ஹாசனின் புதிய சிந்தனைகள் அரசியல் களத்தில் பேசு பொருளாகவும் மாறியது. கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை கடந்த 2019-ம் ஆண்டு முதல்முறையாக கமல்ஹாசன் சந்தித்தார். அந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். 

அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை வாங்கினார்கள். பாராளுமன்ற தேர்தலில் விட்ட வெற்றியை சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் பெற்று விடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர். 

இந்த நம்பிக்கையோடு 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சி துணிச்சலோடு சந்தித்தது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். சட்டசபை தேர்தல் களத்திலும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், ‘‘தமிழகம் விற்பனைக்கு அல்ல’’ என்கிற கோ‌ஷத்தை கையில் எடுத்தார். தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இந்த முறை எங்களை ஆதரியுங்கள் இரண்டு திராவிட கட்சி களுக்கும் மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறி அவர் பிரசாரம் செய்தார்.

கட்சி தொடங்கிய நாளில் இருந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்படும் அனைத்து போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களில் சீரமைப்போம் தமிழகத்தை என்கிற வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அதனுடன் சேர்த்து தமிழகம் விற்பனைக்கு அல்ல என்கிற கோ‌ஷத்தை கமல்ஹாசன் முன் நிறுத்தினார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தோல்வியே கிடைத்தது. வெற்றியின் விளிம்பு வரை சென்று கமல்ஹாசனும் தோற்றுப் போனார். 

இப்படி பாராளுமன்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசன் கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் பலர் விலகி ஓடினார்கள். இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளரவில்லை. தொடர்ந்து கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் கட்சி களம் கண்டது.

உள்ளாட்சியில் தன்னாட்சி என்கிற கோ‌ஷத்தோடு கமல்ஹாசனும் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் இந்த பிரசாரம் அனல் பறக்கும் வகையில் அமையவில்லை. பெயரளவுக்கு சில இடங்களில் அவர் பேசினார். அதேநேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்யப்போகும் பணிகளை பட்டியலிட்டு அறிக்கையாக கமல்ஹாசன் வெளியிட்டு இதுதொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தார்.

சீரமைப்போம் தமிழகத்தை, தமிழகம் விற்பனைக்கு அல்ல, உள்ளாட்சியில் தன்னாட்சி என்பது போன்ற கவர்ச்சிகரமான கோ‌ஷங்களுடன் மக்களிடம் செல்வாக்கை பெறுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் வியூகம் வகுத்தார்.

ஆனால் அவரது பிரசாரங்களும், கோ‌ஷங்களும் மக்கள் மத்தியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்கள் கண்டு கொள்ளவில்லை. எப்போதும் போல தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் மட்டுமே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக எங்களை தேர்வு செய்யுங்கள் என்று கமல்ஹாசன் வைத்த கோரிக்கையை தமிழக மக்கள் முற்றிலுமாக புறந்தள்ளி இருக்கிறார்கள். கட்சி தொடங்கி ஐந்தாம் ஆண்டு விழா நடந்திருக்கும் இந்த நேரத்தில் இனி செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சி.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் மக்கள் நீதி மய்யம் சந்தித்துவிட்டது. ஆனால் மூன்று தேர்தல்களிலும் அந்தக் கட்சிக்கு தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இனி எதிர்காலம் இருக்குமா? என்கிற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியை அந்த ரீதியிலேயே விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த தோல்வி தொடர் பாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘அனைத்து பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

தேர்தல் தோல்வியால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் துவண்டு போய் விட மாட்டார்கள் என்றும் நம்பிக்கையோடு எங்கள் பயணத்தை தொடருவோம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களின்போது கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்துக் கொண்டு வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதனை உயர்த்தி காட்டுவார்.

ஆனால் கடந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட் எந்த வெளிச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் கட்சியின் எதிர்காலம் இருள் ஆகிவிடுமோ என்கிற அச்சமும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற தேர்தல்களில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory