» சினிமா » செய்திகள்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 3:35:30 PM (IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அஜித் வந்தார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கவுள்ளது படக்குழு. போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு தகவலுமே வெளியாகாத காரணத்தால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளம், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரிடமும் "வலிமை அப்டேட்" என்று கேட்கத் தொடங்கினார்கள்.
இது தொடர்பாக பெரும் சர்ச்சை உருவானதால், அஜித் மற்றும் படக்குழுவினர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில், திடீரென்று அஜித் இன்று (பிப்ரவரி 18) காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். அங்கிருந்த காவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே அஜித்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். எதற்காக வந்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
ஆனால், அஜித் வந்த கால் டாக்ஸி தவறுதலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்திருப்பது தெரியவந்தது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக விருப்பம் கொண்டவர் அஜித். எழும்பூரில் உள்ள ரைபில் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளார். அங்குதான் சென்னை காவல் ஆணையரின் பழைய அலுவலகம் இயங்கி வந்தது.
தற்போது அங்கு செல்வதற்காக கூகுள் மேப்பில் பதிவிட்டு, கால் டாக்ஸியில் வந்துள்ளார். ஆனால், கூகுள் மேப் தவறுதலாகக் காட்டியதால் கால் டாக்ஸி சென்னை காவல் ஆணையரின் புதிய அலுவலகத்துக்கு வந்துவிட்டது. சென்னையில் 144 தடை உத்தரவு இருப்பதால் வேப்பேரியில் உள்ள சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் 3-வது நுழைவு வாயில் கதவு மூடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் கால் டாக்ஸியை உள்ளே அனுமதிக்கவில்லை.
பிறகு காருக்குள் இருந்து அரைடவுசர், கருப்பு டீசர்ட், முகக்கவசம், தொப்பி, அணிந்து ஒருவர் உள்ளே காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் வந்து பாதுகாப்புப் பிரிவு போலீஸாரிடம் பேசினார். அது அஜித் என்பது தெரிந்தவுடனேயே கூட்டம் கூடியது.
பின்னர் பாதுகாப்புக் காவல்துறையினர் "எதற்காக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளீர்கள்" என அஜித்திடம் கேட்டுள்ளனர். அதற்கு "ரைபிள் கிளப்பிற்கு வந்துள்ளதாக" தெரிவித்துள்ளார். ரைபிள் கிளப் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் இருப்பதாகப் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், அஜித்தோ கால் டாக்ஸியில் வந்ததால் கூகுள் மேப் பதிவு செய்தே வந்ததாகவும் தவறாகப் புதிய ஆணையர் அலுவலகத்திற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். பிறகு ரைபிள் கிளப் இருக்கும் பகுதிக்குத் தான் வந்த கால் டாக்ஸிலேயே சென்றுவிட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் அஜித் இருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அஜித் புகார் கொடுப்பதற்கு வந்திருக்கலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு, காவல்துறையினர் தரப்பிலிருந்து அவர் புகார் கொடுக்க வரவில்லை, வழிதவறியே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்டோபருக்குள் இந்தியன் 2 படத்தை முடித்து தர முயற்சிப்பேன்: இயக்குநர் ஷங்கர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:04:51 PM (IST)

வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:39:18 PM (IST)

சசிகுமார் நடித்த எம்.ஜி.ஆர். மகன் ரிலீஸ் ஒத்திவைப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:08:30 PM (IST)

தவறான சிகிச்சையால் வீங்கிய முகம்: தோல் மருத்துவர் மீது நடிகை ரைசா வில்சன் புகார்!
திங்கள் 19, ஏப்ரல் 2021 3:48:23 PM (IST)

மத்திய, மாநில அரசுகளுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:31:40 AM (IST)

நடிகர் விவேக் மறைவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்
சனி 17, ஏப்ரல் 2021 5:53:29 PM (IST)
