» சினிமா » திரை விமர்சனம்

சாமி 2: விக்ரம் - ஹரியின் ஆக்‌ஷன் மசாலா!!

வியாழன் 27, செப்டம்பர் 2018 5:31:46 PM (IST)விக்ரமின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த சாமி படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் சாமி 2 எப்படி என்பதை பார்ப்போம் 

ஒரு படத்தின் தொடர்ச்சியாக, அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களை எடுத்து வெற்றிக் கண்ட இயக்குநர் ஹரி, இந்த சாமி 2 வையும் சாமியின் தொடர்ச்சியாக கையாண்டிருந்தாலும், திரைக்கதையில் ஏகப்பட்ட மாற்றங்களுடன், கதாபாத்திரங்களிலும் பல மாற்றங்களை செய்திருக்கிறார். 

முதல் பாகத்தில் ஆறுசாமியான விக்ரம் வில்லன் பெருமாள் பிச்சையை வதம் செய்வதோடு, சாமியின் வேட்டை தொடரும், என்று படம் முடிய, இரண்டாம் பாகமான சாமி 2-வில் பெருமாள் பிச்சையின் மகனான வில்லன் பாபி சிம்ஹா, தனது தந்தையை கொலை செய்த ஆறுச்சாமியை பழிவாங்குவதோடு, திருநெல்வேலியில் தனது தந்தையை போல பெரும்புள்ளியாக வலம் வருகிறார். இதற்கிடையே, தனது தந்தை மரணம் குறித்து எந்த விபரமும் தெரியாமல் போலீஸாகும் ஆறுச்சாமியின் மகனான ராமசாமியான விக்ரம், போலீஸ் அதிகாரி ஆவதோடு, திருநெல்வேலிக்கே வர, அவருக்கும் பாபி சிம்ஹாவுக்கும் மோதல் ஏற்படுகிறது.

பெருமாள் பிச்சை - ஆறுசாமிக்கு ஏற்பட்ட அதே யுத்தம் அவர்களது வாரிசுகளான ராவணா பிச்சை - ராமசாமிக்கு இடையேயும் ஏற்பட இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை படு விறுவிறுப்பாக இயக்குநர் ஹரி சொல்லியிருப்பது தான் சாமி 2 படத்தின் மீதிக்கதை. ஒரு படத்தின் தொடர்ச்சியை எந்தவித குழப்பமும் இன்றி சொல்லவதில் தான் கெட்டிக்காரர் என்பதை ஏற்கனவே சிங்கம் தொடர்சியில் நிரூபித்த இயக்குநர் ஹரி, அதே தெளிவோடு இந்த சாமி 2 படத்தின் திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறார்.

அப்பா, மகன் என இரண்டு வேடங்களிலும் நடிப்பின் மூலம் வித்தியாசம் காட்டியிருக்கும் விக்ரமின் நடிப்பு அசர வைக்கிறது. போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக அவர் எண்ட்ரியாகும் காட்சிகள் அசத்தல். கீர்த்தி சுரேஷுடன் ரொமான்ஸ. ஆட்டம், பாட்டம், அதிரடி என்று ரொம்ப சுறுசுறுப்பாகவே நடித்திருக்கிறார். விக்ரம் ஹீரோ என்றால், அவருக்கு இணையாக மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு பாபி சிம்ஹாவின் வில்லத்தனம் அசுரத்தனமாக இருக்கிறது. ராவணா பிச்சை என்ற வேடத்தில் பாபி சிம்ஹா, சும்மா பட்டையை கிளப்பியிருக்கிறார். என்ன ஒரு எனர்ஜியான நடிப்பு..., வில்லன் வேடத்திற்காகவே பிறந்த நடிகரைப் போல மனுஷன் மிரட்டுகிறார்.

ஆரம்பத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு சில காட்சிகளோடு மறைந்துவிடுகிறார். மகன் விக்ரமுக்கு ஜோடியாக வரும் கீர்த்தி சுரேஷ், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்வதோடு, சூரியுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அதேபோல் சூரியின் டைமிங் காமெடியும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும், காட்சிகளுடன் சேர்த்து பார்க்கும் போது ஆட்டம் போட வைக்கிறது. மொலொடி, ஃபோக் என்று அனைத்து ரக பாடல்களையும் கொடுத்து அமர்க்களப் படுத்தியிருப்பவர், பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருப்பவர், கதாபாத்திரங்களுக்காக கொடுக்கப்பட்ட பீஜியம் மூலம் அசத்தியிருக்கிறார்.

மறைந்த ஒளிப்பதிவாளர் ப்ரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜ் ஆகியோரது ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. இயக்குநர் ஹரியின் படம் என்றாலே ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் சேர்ந்து இருப்பதோடு, அனைத்தையும் அளவோடு கையாண்டு, அதை முழு பொழுதுபோக்கு படமாக கொடுப்பார், என்ற நம்பிக்கை அனைத்து ரசிகர்களிடமும் உண்டு. அந்த நம்பிக்கையை இந்த படத்தின் மூலமும் இயக்குநர் ஹரி காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

படத்தின் ஆரம்பமும், இடைவேளைக் காட்சியும் செம மாஸாக இருப்பதோடு, படத்தின் வசனங்கள் அனல் பறக்கும் விதத்தில் இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் வீரியம் வசனங்களிலும் இருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு, ஜெட் வேகத்தில் திரைக்கதை நகர்ந்தாலும், படத்தில் குடும்ப செண்டிமெண்டும், குடும்பத்தோடு படத்தை பார்ப்பதற்கான பல அம்சங்களையும் இயக்குநர் ஹரி படத்தில் வைத்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும்? என்று யோசித்து முடிப்பதற்குள்ளாகவே, அடுத்தக் காட்சிக்கு பயணிக்கும் இயக்குநர் ஹரியின் வேகம், படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் விக்ரம், பாபி சிம்ஹா ஆகியோரிடம் மட்டும் இன்றி, அனைத்து நடிகர்களிடமும் இருப்பது நம்மை படம் முழுவதும் நிமிர்ந்தே உட்கார வைக்கிறது. காவல் துறையே பார்த்து பெருமைப்படும் அளவுக்கு போலீஸின் பெருமையை பேசும் இயக்குநர் ஹரி, படத்தில் சில சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்வதோடு, முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் இந்த சாமி 2 வை கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், இந்த சாமி 2 வேகமும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory