» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா அதிரடி வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!

வியாழன் 16, ஜனவரி 2025 3:31:50 PM (IST)



ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலிரண்டு ஆட்டங்களில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா. இந்நிலையில் கடைசி ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாக ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா-பிரதிகா ரவால் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். முதல் ஓவர் முதல் 26-ஆவது ஓவர் வரை இருவரும் இணைந்து அயர்லாந்து பெளலிங்கை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்களைக் குவித்து சாதனை படைத்தனர். மந்தனா துரித சதம் 135: சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனா 7 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் வெறும் 80 பந்துகளில் 135 ரன்களை விளாசி ஆர்லா பிரெண்டர்கேஸ்ட் பந்துவீச்சில் கேன்னிங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இதன் மூலம் துரித சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார் மந்தனா.

அவருக்கு அடுத்து ஆட வந்த ரிச்சா கோஷ் வழக்கம் போல் அதிரடியாக ஆடி 1 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 59 ரன்களை விளாசி கெல்லி பந்தில் போல்டனார். மறுமுனையில் நிலைத்து ஆடிய இளம் வீராங்கனை பிரதிகா ரவால் 1 சிக்ஸர், 20 பவுண்டரியுடன் 129 பந்துகளில் 154 ரன்களை விளாசி தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். ப்ரெயா சார்ஜன்ட் பந்தில் டெம்ப்úஸவிடம் கேட்ச் தந்து அவுட்டானார் பிரதிகா.

தேஜல் ஹஸப்னீஸ் 28, ஹர்லின் தியோல் 15 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4, தீப்தி சர்மா 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 435/5 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. பெளலிங்கில் அயர்லாந்து தரப்பில் ஆர்லா பிரெண்டர்கேஸ்ட் 2-71 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய அயர்லாந்து வீராங்கனைகளால் இந்திய பெளலிங்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41, ஆர்லா பிரெண்டர்கேஸ்ட் 36 ரன்களை எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினர்.

 31.4 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி 131/10 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 304 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்: பெளலிங்கில் இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3-27, தனுஜா கன்வர் 2-31 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஒருநாள் ஆட்டத்தில் 435/5 ரன்களை குவித்து முதன்முறையாக 400 ரன்களைக் கடந்தது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மட்டுமே 400 ரன்களை கடந்திருந்தன. பிரதிகா-மந்தனா இருவரும் இணைந்து 233 ரன்களைக் குவித்தனர். மகளிர் ஒருநாளில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்த நான்காவது இந்திய இணை சாதனையை படைத்தனர்.

இந்திய அணி ஒருநாள் தொடரில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 70 பந்துகளில் 100 ரன்களை விளாசி துரித வேகத்தில் சதம் அடித்த இந்திய வீராங்கனை சாதனையை படைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory