» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மனைவியை பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா அறிவிப்பு!

வெள்ளி 19, ஜூலை 2024 11:31:00 AM (IST)

மனைவியை பரஸ்பரமாக பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா அறிவித்துள்ளார். மேலும், மகன் அகஸ்தியாவை இருவரும் கவனித்துக் கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் பிரிந்துவிட்டதாக பேசப்பட்டு வந்தது. ஹார்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா அவரது மகன் அகஸ்தியாவை அழைத்துக் கொண்டு நேற்று விமான நிலையத்துக்கு வந்தார். இந்த நிலையில், தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிவதாக ஹார்திக் பாண்டியா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹார்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "4 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, நடாஷாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்து எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம். இதுதான் எங்கள் இருவருக்கும் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை, நட்பு, நாங்கள் ஒரு குடும்பமாக இருந்ததால் இந்த முடிவு ஒரு கடினமான முடிவாகும்.

அகஸ்தியா எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அகஸ்தியாவை இருவரும் கவனித்துக் கொள்வோம். மேலும், அவருடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் கிடைக்க நாங்கள் ஒத்துழைப்போம். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் உண்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிரடியான பேட்டிங் மற்றும் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக் கோப்பையில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார் ஹார்திக் பாண்டியா.ஐபிஎல் தொடரில், மும்பை அணியின் கேப்டனாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான ஹார்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி பாராட்டுகளை பெற்றார்.

ஹார்திக் பாண்டியாவும், செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடாஷா ஸ்டான்கோவிக், தமிழில் அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹார்திக் மற்றும் நடாஷா இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory