» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி-20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

ஞாயிறு 7, ஜூலை 2024 11:09:08 AM (IST)



பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.

இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 20 ஓவர் போட்டியில் முதல்முறையாக கால் பதித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது.

20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுக்கு 115 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக கிளைவ் மடான்டே ஆட்டமிழக்காமல் 29 ரன்னும், தியான் மயர்ஸ் 23 ரன்னும், பிரையன் பென்னெட் 22 ரன்னும், வெஸ்லி மெட்விரே 21 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சிகந்தர் ராசா (17 ரன்) உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு, ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி அளித்ததுடன் வேகமாக விக்கெட்டையும் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர். 5 ஓவரில் 22 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை  இழந்து தத்தளித்த இந்திய அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்த வண்ணம் இருந்தது.

சற்று நேரம் தாக்குப்பிடித்த ஆடிய கேப்டன் சுப்மன் கில் 31 ரன்னிலும் (29 பந்து, 5 பவுண்டரி), ஆவேஷ்கான் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நம்பிக்கை அளித்த வாஷிங்டன் சுந்தர் (27 ரன், 34 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் வீழ்ந்தார்.

19.5 ஓவர்களில் இந்திய அணி 102 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் டெண்டாய் சத்தாரா, கேப்டன் சிகந்தர் ராசா தலா 3 விக்கெட் சாய்த்தனர். சிகந்தர் ராசா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிரப்பு செய்கின்றன.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நன்றாக பந்து வீசினோம். ஆனால் பேட்டிங்கில் எங்களுடைய தரத்துக்கு தகுந்தபடி செயல்படவில்லை. பேட்டிங்கில் நிலைத்து நின்று ஆட முடிவு செய்து இருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை. பாதி இன்னிங்சுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நான் கடைசி வரை நின்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றம் அளிக்கிறது. 116 ரன் இலக்கை விரட்டும் போது கடைசி பேட்ஸ்மேன் தான் வெற்றி தேடித்தர வேண்டிய நிலை ஏற்படும் போது தவறு நடந்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory