» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து: ஆஸ்திரேலியா வெளியேற்றம்!

சனி 5, நவம்பர் 2022 5:11:58 PM (IST)



டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் கருணாரத்னே இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. இலங்கை தொடக்க வீரர்களான பதும் நிசாங்காவும் குசால் மெண்டிஸும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மெண்டிஸ். முதல் 6 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என உயர்ந்தது. 

நிசாங்கா தொடர்ந்து நன்கு விளாடிய ஸ்கோரை உயர்த்தினார். 33 பந்துகளில் அரை சதமெடுத்தார். இந்த உலகக் கோப்பையில் அவருடைய 2-வது அரை சதம் இது. எனினும் 16-வது ஓவரில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிசாங்கா. கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கையால் 25 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணி தனது அற்புதமான பந்துவீச்சால் இலங்கையை அதிக ரன்கள் எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தியது. இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி இலக்கை ஆரம்பத்தில் நன்கு விரட்டியது. 9-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் பரபரப்பானது. பட்லர் 28, அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்தார்கள். ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண் ஆகியோர்  சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் கடைசிக்கட்டத்தில் வெற்றி பெற தடுமாறியது இங்கிலாந்து அணி. எனினும் 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், 36 பந்துகளில் 42 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லஹிரு குமாரா, ஹசரங்கா, தனஞ்ஜெயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குரூப் 1 பிரிவில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதனால் 7 புள்ளிகளைக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory