» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிங் இஸ் பேக்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

திங்கள் 11, அக்டோபர் 2021 8:41:16 AM (IST)



ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று  நிறைவடைந்த நிலையில்,  புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இதன்படி  இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். 

சீரான இடைவேளியில் டெல்லி அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தாலும், இறுதியில்  ரிஷப் பண்ட்-ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். கடைசியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய சென்னை அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி இம்முறை ஆரம்பத்திலேயே பிரிந்தது. டு ப்ளஸ்ஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற, பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்டினார். இந்த ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்த நிலையில் உத்தப்பா 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த தாக்கூரும், ராயுடுவும் அடுத்தடுத்து வெளியேற போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.  முதலில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் பின்னர் அதிரடி காட்டினார். 70 ரன்கள் எடுத்த நிலையில் 19-ஆவது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் மொயீன் அலி கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த மூன்று பந்துகளையும் டோனி பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார். இரண்டு பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் 173 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி. இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி, 'கிங் இஸ் பேக்' என்று  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர் எனவும், மீண்டும் ஒருமுறை தன்னை துள்ளிக் குதிக்கச் செய்ததாகவும் கோலி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory