» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார், புவனேஷ்வர் அசத்தல் : முதல் டி-20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

திங்கள் 26, ஜூலை 2021 10:41:03 AM (IST)இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் சூர்ய குமாரின் அபார அரைசதம், புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.துவக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, சமீரா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளை சந்தித்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார்.  சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் விளாசினார்.

ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை ருசித்தது.இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சாரித் அசலங்கா 44 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், தீபக் சாஹர் 2 விக்கெட்களும், குருணல் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக்பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பெறும் 9-வது வெற்றியாகும். சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்து பெறும் 7-வது வெற்றியாகும். 3.3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory