» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!

வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அவார வெற்றி பெற்றது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோவ், கிராவ்லி ஆகியோரும் இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். முதல் நாளில் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 57 ரன்களுடனும் ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 

இந்திய அணி சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் முன்னிலை பெறும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்கள். ரஹானே, லீச் பந்துவீச்சில் 7 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். பிறகு 66 ரன்களில் விளையாடி வந்த ரோஹித் சர்மாவையும் வீழ்த்தினார் லீச். இதன்பிறகு பந்துவீச வந்த ஜோ ரூட், இந்திய அணியின் கீழ் நடுவரிசைக்குப் பெரும் சோதனையாக மாறினார்.

முதல் பந்திலேயே ரிஷப் பந்தை 1 ரன்னில் வெளியேற்றினார் ரூட். பேட்டிங் திறமைக்காகவும் அணிக்குத் தேர்வான வாஷிங்டன் சுந்தர், ரன் எதுவும் எடுக்காமல் ரூட் பந்தில் போல்ட் ஆனார். அதே ஓவரில் அக்‌ஷர் படேலும் ரூட் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது மூன்று ஓவர்கள் வீசியிருந்த ரூட், ரன் எதுவும் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

ஓரளவு கெளரவமான முன்னிலையைப் பெற்றுத் தருவார் என அஸ்வினை இந்திய ரசிகர்கள் நம்பினார்கள். அவர் 3 பவுண்டரிகள் அடித்து 17 ரன்களில் ரூட் பந்தில் வீழ்ந்தார். பும்ரா ஒரு ரன்னில் ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக அவர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 8 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் திட்டங்களை முறியடித்துள்ளார் ரூட். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 53.2 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ரூட் 5, லீச் 4, ஆர்ச்சர் 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரவேற்க காத்திருந்தனர். கிராவ்லி, சிப்லே, பேர்ஸ்டோவ், ரூட் உள்ளிட்ட முதல் வரிசை வீரர்களை வரிசையாக வெளியேற்றினார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல்.

நடுவரிசையில் களமிறங்கிய ஸ்டோக்ஸ், அஸ்வின் சூழலில் வீழ்ந்தார். பின் களமிறங்கிய அனைத்து வீரர்களையும் ஒற்றை இலக்கு ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்க செய்தனர்.இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வீரர்கள் பறிகொடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற 49 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற செய்தனர். ஆட்ட முடிவில் ரோகித் 25 ரன்களும், கில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த தொடரில் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளும், அஸ்வின் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்கள்.இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 முன்னிலை பெற்றது இந்திய அணி.

400 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்திய போது அது அவரது 400-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 16-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். தமிழகத்தை சேர்ந்த 34 வயதான அஸ்வின் இதுவரை 77 டெஸ்டுகளில் விளையாடி 401 விக்கெட்டுகள் அறுவடை செய்திருக்கிறார்.

இந்திய பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் அனில் கும்பிளே (619 விக்கெட்), கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன்சிங் (417 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார். அத்துடன் 400 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் (77 டெஸ்டுகளில்) பெற்றார். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் 72 டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory