» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி

வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் அக்‌ஷர் பட்டேலின் சுழல் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது .

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த டெஸ்டுக்கான இ்ந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது சிராஜ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் 4 மாற்றமாக ரோரி பர்ன்ஸ், லாரன்ஸ், மொயீன் அலி, ஆலி ஸ்டோன் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் கிராவ்லி ஆகியோர் இடம் பிடித்தனர். இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில், இங்கிலாந்து ஒரே சுழற்பந்து வீச்சாளரை மட்டும் தேர்வு செய்தது ஆச்சரியம் அளித்தது.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி ஜாக் கிராவ்லியும், டாம் சிப்லியும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தனது 100-வது டெஸ்டில் கால்பதித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3-வது ஓவரிலேயே முத்திரை பதித்தார். அவரது பந்து வீச்சில் டாம் சிப்லி (0) ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ (0) அக்‌ஷர் பட்டேலின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதன் பின்னர் ஜாக் கிராவ்லியும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். கிராவ்லி அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டார். இருப்பினும் அக்‌ஷர் பட்டேலும், அஸ்வினும் இடைவிடாது சுழல் தாக்குதலை தொடுத்து அழுத்தம் கொடுத்தனர். ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். ஸ்கோர் 74 ரன்களை எட்டிய போது ஜோ ரூட் (17 ரன், 37 பந்து, 2 பவுண்டரி) அஸ்வின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. தொடர்ந்து ஜாக் கிராவ்லியும் (53 ரன், 84 பந்து, 10 பவுண்டரி) இதே போல் வீழ்ந்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் பேட்டிங் வரிசை முற்றிலும் சீர்குலைந்தது. பந்து எப்போது சுழன்று திரும்புகிறது? எப்போது சுழற்சி இன்றி நேராக வருகிறது என்பதை கணிக்க முடியாமல், அவர்கள் திண்டாடினர். துணை கேப்டன் பென் ஸ்டோக்சும் (6 ரன்) தாக்குப்பிடிக்க முடியவில்லை. இரவு உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் சுருண்டது. கடைசி 38 ரன்களுக்கு அந்த அணி 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. அத்துடன் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களில் அந்த அணி 200 ரன்னுக்குள் முடங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் 4-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக அவர்களின் மோசமான ஸ்கோராகவும் பதிவானது. உள்ளூர் வீரரான இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். பகல்-இரவு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அஸ்வினுக்கு 3 விக்கெட் கிடைத்தது. 

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆட்டநேரமுடிவில் 33 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது.  தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷூப்மான் கில் இருவரும் களமிறங்கினர். கில் 11 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஆர்ச்சர் பந்துவீச்சில் கிராலியால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா வந்த வேகத்தில் வெளியேறினார். லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி புஜாரா டக்அவுட்டில் பெலியின் திரும்பினார்.கோலி 27 ரன்கள் சேர்த்திருந்தபோது, லீச் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கோலி, ரோஹித் இருவரும் 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இன்னும் இங்கிலாந்தைவிட 13 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest CakesThalir Products
Thoothukudi Business Directory