» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லீச், ஆண்டர்சன் அபாரம்: சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து அணி!

செவ்வாய் 9, பிப்ரவரி 2021 3:37:27 PM (IST)லீச், ஆண்டர்சன் ஆகியோரின் அபார பந்துவீச்சால் சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா,  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. ரோஹித் 12 ரன்களுக்கு வெளியேறியிருந்தாா். கில் 15, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

5-ம் நாளான இன்று இந்திய அணி மிகவும் நம்பியிருந்த புஜாராவை 15 ரன்களில் வீழ்த்தினார் ஜேக் லீச். நன்கு விளையாடி வந்த ஷுப்மன் கில், 50 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதே ஓவரில் ரஹானேவையும் டக் அவுட் செய்து அசத்தினார் ஆண்டர்சன். இதன்பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், 11 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், பெஸ் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். 5-ம் நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. 

74 பந்துகளில் அரை சதமெடுத்தார் விராட் கோலி. மறுமுனையில் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தபோது நம்பிக்கையுடன் விளையாடிய கோலியை 72 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்மிழந்தார்.  இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 58.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் சென்னை டெஸ்டை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. லீச் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Thalir Products

Black Forest Cakes

Thoothukudi Business Directory