» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்

செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா என்றும் இந்த மாநாட்டில் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பாஜக தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளதை அங்கு நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து பாஜக, அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பாஜக 2020 ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பாஜகவும் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.

திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய எல்.முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய எல்.முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் 2020 டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினர். இதில் அப்போதைய மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜுன் 10-ம் தேதி மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை ‘சிக்கந்தர் மலை’ என திமுக அழைப்பதாகவும் ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். இது பாஜகவின் அரசியல் அழைப்பு என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழ் கடவுள் என்று தமிழர்கள் கொண்டாடும் குன்றுதோறாடும் குமரனுக்கு ஆண்டு முழுவதும் தைபூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா, மற்றும் பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடக்கின்றன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் பாஜகவும் முருகனுக்கு ஆபத்து என்ற பிம்பத்தைக் கட்டமைக்க விழைவதை தமிழ் மக்கள் புறந்தள்ளுவார்கள்.

முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன. திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன. அறநிலையத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றத் தீர்மானம் பாஜகவின் அரசியல் கோரிக்கையாகும். சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் மாநாட்டின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், பெரியார், அண்ணா ஆகியோரை இழிவு படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது. இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது.

மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. 2021-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பாஜக எல்.முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே நிலை தான் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SURYANJun 24, 2025 - 03:27:48 PM | Posted IP 172.7*****

எப்படியும் உங்களுக்கு 40 தொகுதி கிடைக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory