» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை

திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)



கன்னியாகுமரி - ஹவுரா ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக பயணிகள் நலச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரியிலிருந்து ஹவுராவுக்கு (கொல்கத்தா) திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இந்த ரயில் 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இதுவரை வாராந்திர ரயில் சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த ரயில் சராசரியாக 184 சதமானம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள் என்று கணக்குடன் இயங்கிவருகின்றது என்பதை தென் கிழக்கு ரயில்வே மண்டலம் சார்பாக கண்டறியப்பட்டு இந்த தென்மாவட்ட பகுதிகளில் இருந்து கிழக்கு மாநிலமான ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் பகுதிகளுக்கு  கூடுதல் ரயில்கள் தேவை நல்ல வரவேற்பு உள்ளது ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதை ஆய்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தென்மாவட்டத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று திட்டத்தையும் வகுத்து வருகின்றார்கள். 

ஆனால் தெற்கு ரயில்வே சார்பாக இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதைப்போல் ஒரு ஆய்வு செய்யாமல் எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள். தெற்கு ரயில்வே அதிகாரிகள் வந்து சீட்டை தேய்த்துவிட்டு சம்பளத்தை மட்டும் வாங்கி செல்கிறார்கள் என்பது மட்டும் புலனாகிறது. இது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்ட இருப்பு பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளதால் அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி மார்க்கத்தில் ரயில்கள் இயக்க இதுபற்றி எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ள மாட்டார்கள். 

ஒரு சில வேளைகளில் தெற்கு  ரயில்வே மண்டலம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டால் திருவனந்தபுரம் மற்றும் மதுரை கோட்டத்துக்கு இடையே நல்ல புரிதல் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில் ஊத்தி மூடப்படும். ஆனால் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் இது போன்று ஏதேனும் புதிய திட்டம்  வந்தால் அவர்கள் நல்ல ஒத்துழைப்புடன் கேரளா பயணிகள் நலன் கருதி நிறைவேற்றி விடுவார்கள். 

அடுத்ததாக புதிய ரயில் ஏதேனும் இயக்குவதற்கு திட்டம் இருந்தால்  அந்த ரயில் சென்னையிலிருந்து இயக்குவார்கள் அல்லது கேரளாவிலிருந்து இயக்குவார்கள்.  கடந்த வாரம் சென்னையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பகத் கி கோதிக்கு வாரம் ஐந்து நாள் ரயில் புதிதாக ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு தமிழ்நாடு பயணிகள் பயன்படும் படியாக கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக  தமிழ்நாடு மக்கள் பயன்படும் படியாக ரயில்கள் இயக்க அவர்களுக்கு மனது வரவே வராது.

தென்மாவட்டங்களில் இருந்து இந்தியாவில் உள்ள கிழக்கு பகுதி மாநிலங்களுக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இதன்படி தற்போது திருச்சியிலிருந்து ஹவுராவுக்கு வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே வைக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து காலையில் புறப்பட்டு  முழு தமிழ்நாடு ரயில் நிலையங்களில் பகலில் பயணம் செய்து இரவு சென்னைக்கு சென்றுவிட்டு பின்னர் ஆந்திர மாநிலத்தில் நடு இரவு நேரங்களில் பயணிக்குமாறு காலஅட்டவணை அமைத்து இயக்கப்படுகின்றது. இவ்வாறு இயக்குவதால் முழு தமிழ்நாடு பயணிகள் சுமார் 16 முதல் 20 மாவட்ட பயணிகள் நேரடியாக இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும்.

சென்னைக்கு பகல் நேர ரயில்: இந்த கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்கும் போது தென்மாவட்ட பயணிகள் சென்னைக்கு செல்ல ஒரு தினசரி பகல்நேர ரயில் சேவை கிடைக்கும் இது தென் மாட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இருவழி பாதை: சென்னை முதல் கன்னியாகுமரி வரை தற்போது இருவழிபாதை பணிகள் முடிந்து விட்ட காரணத்தால் இந்த பகுதியில் தினசரி ரயில் இயக்குவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க போவதில்லை.

கன்னியாகுமரி முனை விரிவாக்கம்: கன்னியாகுமரி ரயில் நிலையம் தற்போது கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்பு விரிவாக்கம் பணிகள் முடிவு பெற்றுவிட்டன. இந்த ரயிலை பராமரிப்பதற்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட்லைன்கள் உள்ளன.

கன்னியாகுமரி – மதுரை - ஹவுரா மார்க்கம் சராசரி பயணிகள் நெருக்கடி அல்லது பயணிகள் பயன்பாடு (occupancy)

இரண்டடுக்கு ஏசி – 183 %
மூன்றடுக்கு ஏசி -162 &
இரண்டாம் வகுப்பு படுக்கை -196 &
மொத்தம் - 184 % (occupancy)

மறுமார்க்கமாக ஹவுரா- மதுரை- கன்னியாகுமரி மார்க்கம் சராசரி பயணிகள் நெருக்கடி அல்லது பயணிகள் பயன்பாடு (occupancy)

இரண்டு அடுக்கு ஏசி – 164%
மூன்றடுக்கு ஏசி -134 %
இரண்டாம்வகுப்பு படுக்கை -183%
மொத்தம் - 166 % (occupancy) 

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

GANESHமே 12, 2025 - 05:37:13 PM | Posted IP 162.1*****

மிகவும் நல்ல கருத்து தெற்கு ரயில்வே அக்கறையோடு எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முயற்சி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory