» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமரனுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி - வானதி சீனிவாசன்

சனி 9, நவம்பர் 2024 12:54:48 PM (IST)



'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியையும், சட்டம் ஒழுக்கையும் சீர்குலைக்க சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள அமரன் திரைப்படம் தமிழ்நாட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி 'அமரன்' திரைப்படம் வெளியாகி உள்ள அனைத்து இடங்களிலும் குடும்பம் குடும்பமாக இந்த திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி அமரன்' திரைப்படத்தைப் பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தியாக வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமாக சென்று சேருவதையும், மக்களிடம் தேசபக்தி பொங்கி எழுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள்,'அமரன்' திரைப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளனர். சில அடிப்படைவாத அமைப்புகள் 'அமரன்' திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், "அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள்" என கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது இந்தியாவிடம் உள்ள காஷ்மீரை அபகரிக்க துடிக்கும் பயங்கரவாதிகளையும், இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் பிரிவினைவாதிகளையும் மண்ணுரிமைப் போராளிகள் என்றும், தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுள்ள ஜவாஹிருல்லா கூறுவது கடும் கண்டனத்துக்குரியது, தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ள அவரது இந்த கருத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியையும், சட்டம் ஒழுக்கையும் சீர்குலைக்க சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு வன்முறைக்காடாகி விடும். கோவை கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை மறக்க வேண்டாம் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவே முடியாத அங்கம். காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பவர்களை, மண்ணுரிமைப் போராளிகள் என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றம். பிரிவினைவாதிகளை, பயங்கரவாதிகளை யார், எந்த வழியில் ஆதரித்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள அடிப்படைவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்க வேண்டும் தேசத்தின் இறையாண்மையில் எந்தவொரு சமரசத்தையும் தி.மு.க. அரசு செய்யக் கூடாது 'அமரன்' திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory