» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திராவிடத்தை எதிர்ப்பது ஆரியத்துக்கு துணை போகும் : சத்யராஜ் பேச்சு

சனி 9, நவம்பர் 2024 12:14:39 PM (IST)

"தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது” என்று நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று (நவ.8) ‘திராவிடமே தமிழுக்கு அரண்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ் பேசுகையில், "திராவிடத்தை ஆரியம் எதிர்க்கலாம். ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது. ஆரியத்துக்கு துணை போனால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் மேலோங்கும். 

தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்.. தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தவர் நிறைய பேர் வேலை பார்க்க வருகின்றனர். அவர்களுக்கும் திராவிடத்தை நாம் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்குப் புரிந்த மொழியில் எடுத்துரைக்க வேண்டும். வட மாநிலங்களில் சாதியப் பிரச்சினைகள் அதிகம். இங்கே வேலைக்கு வரும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. 

அவர்கள் இங்கே வேலை பார்க்க வருகின்றனர் என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை இல்லை, மதக் கலவரங்கள் இல்லை. நிம்மதியாக வாழலாம் என்று வருகின்றனர். இதற்கு திராவிடம் தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி பேசுவார்கள். 

இங்கே வட மாநிலத்தவர் சிறுசிறு வேலை நிமித்தமாக அதிகமாக வருகிறார்கள் என்றால், அதற்கு இங்குள்ளவர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை என்று அர்த்தமில்லை, சிறிய வேலைகளைத் தாண்டி பெரிய இடத்தில் வேலை செய்யும் சூழலில் இங்குள்ளவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள் என்றே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

அண்மையில் தவெக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், "திராவிடமும் தமிழ் தேசியமும் கொள்கை அளவில் ஒன்றே” எனப் பேசியிருந்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றாக முடியாது என்று அவர் விளக்கி தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் திராவிடம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் "தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு பாராட்டு... மேலும் அதே மேடையில் நடிகர் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் சத்யராஜ். அண்மையில் பைக் டூர் ஒன்றின் ஊடாக அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் அஜித், "மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்காத முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்.

நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேசம், மதம், கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள். இதன்மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்” என்று பேசியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி சத்யராஜ் நடிகர் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory