» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் பற்றி யாரும் விமர்சிக்கக்கூடாது: அ.தி.மு.க.வினருக்கு இபிஎஸ் உத்தரவு
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:18:57 AM (IST)
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணிக்கு 45.38 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதே நேரம் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., கூட்டணியுடன் 75 இடங்களை பெற்றது. வாக்கு சதவீதமும் 39.72 சதவீதமாக குறைந்து போனது.
இதனால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால், ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. எதிர்பார்க்கும் கூட்டணி அமைய வேண்டுமெனில், தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது சாத்தியமாகுமா? என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில், அரசியல் களத்துக்கு புதிதாய் வந்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி காய்களை நடத்திவரும் நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். அந்த மாநாட்டில் திரண்ட தொண்டர்களின் கூட்டம் மற்ற கட்சிகளை சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுவும் மாநாட்டில் பேசிய விஜய், ‘‘2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது உறுதி. என்றாலும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும்’’ என்று வெளிப்படையாக அறிவித்தது, தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன? என்று யோசித்து வருகிறது. வலுவான கூட்டணியுடன் களம் இறங்கும் தி.மு.க.வை வீழ்த்த இதுபோன்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.
இந்த நிலையில், வரும் 6-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதற்காக சில திட்டங்களை வியூகங்களாக வகுத்து வருகிறது.
இதற்கு மத்தியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும், செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
‘அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை' என்ற வகையில், தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முன்கூட்டியே அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
makkalNov 4, 2024 - 02:54:45 PM | Posted IP 162.1*****
கட்சி பத்தி பேசி இருந்தா அப்படி இப்படி ஏதாவது பேசுவார். ஒன்னும் பேசேலன்னு உடனே கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் கூட்டணி வைக்க பிளான் போடுகிறார்.
NameNov 4, 2024 - 09:10:52 PM | Posted IP 172.7*****