» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லூரியில் மாணவர்கள் திடீர் மோதல்: 12 பேர் கைது
சனி 19, அக்டோபர் 2024 9:01:18 AM (IST)
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாணவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சுடலைமுத்து என்பவர் எதேச்சையாக பார்த்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட அதே கல்லூரியில் படிக்கும் மாணவியின் அண்ணன் இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் நேற்று கல்லூரிக்கு வந்தனர். அங்கு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்த சுடலைமுத்துவை திடீரென தாக்கினர். இது மோதலாக மாறியது. காயம் அடைந்த மாணவர் சுடலைமுத்து, இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியின் உறவினர்கள் 4 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேர் என 8 பேரை கைது செய்தனர். மேலும், மாணவியின் அண்ணன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து உள்பட 4 பேரை கைது செய்தனர்.
கைதான 12 பேரில் 10 பேரை அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 2 பேரை நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.