» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : செப்.24ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:36:09 PM (IST)
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசைக் கண்டித்து அ.தி.மு.க., மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், அமெரிக்காவில் மோட்டார் பொருத்திய சைக்கிளை மிதிப்பது போல் நடிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. போலீசாரை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீசாருக்கு இன்று வரை முழு சுதந்திரம் வழங்கவில்லை. முதல்வரின் செயலற்றத் தன்மையால், ஒருசில போலீசார் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.
தி.மு.க., ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறியுள்ளது. கடந்த 11ம் தேதி சென்னை ஐகோர்ட்டே, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், கட்டுப்படுத்த முடியாவிட்டால், சிறப்பு குழு அமைப்போம் என்று தி.மு.க., அரசை எச்சரித்துள்ளது. இதுபோன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டதே இல்லை.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி., முகாம் என்ற பெயரில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை, கோவை மேட்டுப்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, சிவகங்கை, காரைக்குடியில் 3ம் வகுப்பு மாணவிக்கு 72 வயது முதியவர் பாலியல் தொல்லை, கோவை, வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர்களால் பாலியல் வன்கொடுமை, திருச்சியில் ஹாஸ்டல் மாணவிகளுக்கு மருத்துவரால் பாலியல் தொல்லை, தஞ்சையில் 23 வயது பெண் கூட்டு பலாத்காரம், திருச்சியில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம், சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து கொண்டே வருகின்றன.
தி.மு.க., ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கத் தவறியதைக் கண்டித்து அ.தி.மு.க., மகளிர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் வரும் 24ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. '