» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:39:11 AM (IST)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் திருச்சி, மதுரை, நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாகர்கோவில் பள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் பெர்னார்டுஷா நோயல் (41). இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகும். இவர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஆன்லெட் டோலியா. இவர் நாகர்கோவில் வேதநகரைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப்பிறகு இருவரும் பள்ளவிளையில் வசித்து வந்தனர்.
ஆன்லெட் டோலியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உண்டு. இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி ஜஸ்டின் பெர்னார்டுஷா நோயல் நாகர்கோவில்- ஆசாரிபள்ளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜஸ்டின் பெர்னார்டுஷா நோயலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், அதன்பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அவரை கடந்த 10-ந் தேதி இரவு 8.35 மணியளவில் மீண்டும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது மூளை செயலிழந்து இருப்பதை நேற்று முன்தினம் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள், ஜஸ்டின் பெர்னார்டுஷா நோயலின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அவரது 2 சிறுநீரகங்கள், கல்லீரல், 2 கண்கள், தோல் ஆகிய உடல் உறுப்புகளை அறுவைசிகிச்சை மூலம் தனியாக எடுத்தனர். தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பு காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில் கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 2 கருவிழிகள் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளவிளையில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இதற்கிடையே தானமாக பெறப்பட்ட ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்பு பாதுகாப்புக்காக போலீஸ் வாகனங்கள் சென்றன. ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்புகளை கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க நாகர்கோவில் நகரில் மாற்றுப்பாதையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அந்த வழிகளில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.