» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:32:42 AM (IST)
நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தொடர் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சீராக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நேற்று காலை 10 மணி அளவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழத்தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க ேபாலீசார் அனுமதி அளித்தனர். ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் அருவிகளில் சிறிதளவு தண்ணீர் அதிகரித்தாலும் உடனடியாக குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவதோடு, அருவிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கடையை நடத்தி வரும் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.