» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 4:08:41 PM (IST)
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை, இறச்சகுளம் மற்றும் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (05.08.2024) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-"தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை, இறச்சகுளம் மற்றும் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தோவாளை ஊராட்சி ஒன்றியம், இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மாணவர்களின் எண்ணிக்கை, சமையலைறை இருப்பு பொருட்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.1.10 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையினை ஆய்வு மேற்கொண்டதோடு, சில சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட அயோத்திதாசர் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் கண்டளவு ஆதிதிராவிடர் காலனியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூட மாடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசின் ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ.5.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, நடைபெற்று வரும் பெயிண்டிங் உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், பருவமழைக்காலத்தில் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் நிரந்தரமாக தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கருணாவதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பொறி.ஹசன் இப்பராஹீம், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், ஊராட்சிமன்ற தலைவர்கள் நீலகண்ட ஜெகதீஷ் (இறச்சகுளம்), சதீஷ் (ஞாலம்), அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலெட்சுமி, துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.