» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
சனி 3, ஆகஸ்ட் 2024 5:27:02 PM (IST)
ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானத்தை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்பு அன்னதானத்தை துவக்கி வைத்து தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வருவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்த பின்னர், அன்னதானம் மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருக்கோவில் மேற்கூரை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்யப்பட்டது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கூரை சீரமைக்கும் பணி ரூ.1.15 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கூரை பணிக்கு அமைக்கப்பட்டுள்ள மரத்தின் தன்மையை ஆய்வு செய்து, பணிகள் தொன்மை மாறாமல் அமைக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி மாவட்ட இந்துசமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா இராமகிருஷ்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பி.எஸ்.சந்திரா, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கபிள்ளை, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.