» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏராளமான உதவி : தென்னாப்பிரிக்காவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு!

திங்கள் 2, அக்டோபர் 2023 5:12:47 PM (IST)



வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தென்னாப்பிரிக்க தமிழ்ச் சங்கத்தில் சபாநாயகர் அப்பாவு பேசினார். 

அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மாநாட்டில் இந்திய வட்டாரப் பிரதிநிதிகளின் செயலாளராக தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார்.

முன்னதாக, எகிப்து, தென்னாப்பிரிக்கா நாடுகளில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்க ஜோகன்ஸ்பெர்க் இந்திய தூதரக அலுவலகத்தில் உள்ள கூட்ட அறையில், தென்னாப்பிரிக்க வாழ் தமிழ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் மு. அப்பாவு , நேற்று மாலை 5 மணியளவில் கலந்து கொண்டார்கள். பேரவைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் மற்றும் தென்னாப்பிரிக்க வாழ் தமிழ் கூட்டமைப்பு தலைவர் சசிகுமார் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுடன் தமிழ் உறவு எப்படி 1694 ஆம் ஆண்டில் தொடங்கி, இன்று வரை உள்ள நிகழ்வுகள் குறித்து சீனிவாசன் தனது உரையில் குறிப்பிட்டார். அதில் 2 முக்கியமான விஷயங்கள். ஒன்று அடிமைப்படுத்துவதை ரத்து செய்யும் சட்டம், இன்னொன்று ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யும் சட்டம். முதன்முதலில் சென்னையில் இருந்து தான் கப்பலில் தொழிலாளர்களை அழைத்து வந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஆக்கினார்கள். அது மட்டுமல்ல, கூலி என்ற கடினமான வார்த்தையைப் பயன்படுத்தி, அழைத்தார்கள். அதையெல்லாம் தாண்டி வந்து இன்று இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளீர்கள். சிலர் நம் நாட்டில் இருந்து வந்து போயிருக்கிறீர்கள்.

நீங்கள் இங்கு பலவிதமான பிரச்னைகளை சந்தித்து, அவற்றை கடந்து வந்து நிமிர்ந்து நிற்கிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் பழக்க வழக்கம், ஒழுக்கம், தைரியம், அறிவு, திறமை ஆகியவைதான் காரணம். இப்போது, ‘நான் தமிழன், இந்தியன்’ என்று சொல்லி பெருமைப்பட்டு கொள்வதற்கு முக்கிய காரணம் உங்களின் உழைப்புதான். மற்ற நாடுகளில் நமக்கு உள்ள நெருங்கிய உறவு போல், நம்நாட்டுடன் இல்லையே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறது.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன். 2011 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அன்று, மறைந்த கலைஞர் ஆட்சியின் போது, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைப்பதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்போது அது நிறைவேற்றப்படாமல் கிடப்பிலே போடப்பட்டது.

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதன் முதலில் கொரோனாவை ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டார். அத்தோடு சேர்த்து, பிறநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்கள் பட்ட கஷ்டங்களை அறிந்து அவர்களை எவ்வாறு தமிழ்நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்று அவர் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்.
நமது முதலமைச்சர், கொரோனா காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களை, இப்போது அயலக அணியில் இருக்கும் மீரான் மூலமாக தொடர்பு கொண்டு, மும்பையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தமிழர்களை விரைவாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தேவையான ரயில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இப்போது நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு கல்வி, தொழில் போன்ற தேவைகளை அறிந்து பல சட்டத்திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொன்னால், ஒரு காலத்தில் எங்கள் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், ஏதேனும் பிரச்னையில் சிக்கி 10 ஆண்டு, 2 ஆண்டு சிறையில் இருப்பார்கள். ஆனால், அந்த விவரம் அவர்களது குடும்பத்திற்கு தெரியாது. அதே போல், வெளிநாட்டில் ஒரு தமிழர் இறந்துவிட்டால் அந்த உடலை எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆள் இல்லாமல் 6 மாதமாக கூட அங்கேயே இருக்கும்.

ஆனால், இப்போது அப்படி அல்ல. நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , வெளிநாடு வாழ் தமிழர்நலனுக்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை நியமித்து, அயலக தமிழர் நல வாரியம் அமைத்து, 3 நாட்களில் இறந்தவர் உடலை கொண்டு வந்து அந்த குடும்பத்திடம் சேர்க்கப்படுகிறது. வெளிநாட்டில் ஒருவர் இறந்து விட்டால், தமிழ்நாடு அரசுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினால் போதும். அல்லது முதலமைச்சருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் போட்டால் போதும். அதிகபட்சம் 3 நாட்களில் அந்த உடல் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும், அந்த குடும்பத்தில் குழந்தைகளின் படிப்புச் செலவு, திருமணச் செலவை முதலமைச்சரே ஏற்றுக் கொள்கிறார். வேலைவாய்ப்பு உள்பட மற்ற உதவிகளையும் செய்து தருகிறார். உக்ரேனில் கலவரம் அதிகரித்து நம்முடைய தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டபோது, விமானச் செலவை அரசே ஏற்கும் எனத் தெரிவித்து, அடுத்த விமானத்தில் 80 சதவிகித மாணவர்கள் வந்தார்கள் என்றால், தமிழர்களுக்கு உலகத்தில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உரக்கக் குரல் கொடுத்து, நிறைவேற்றித் தர கேட்கக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின். 

எங்களைப் புறக்கணிக்கிறீர்கள் எனச் சுட்டிகாட்டி கேட்பதற்கு ஒரு நபர் இருந்தால்தான் நமக்கு, தமிழர்களுக்கு பாதுகாப்பு. இந்த பாதுகாப்பினை அளிப்பவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் . இங்கே ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதனைக் கேட்பதற்கு உங்களைப் பாதுகாப்பதற்கு உள்ளவர்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் .

அயலகத் தமிழர் தினம், 12 ஆம் தேதி சனவரி மாதம், ஆண்டுதோறும் கொண்டாடும் வகையில் அறிவிப்பு செய்து, முதன் முதலாக நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால், கலைவாணர் அரங்கத்தில், இந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கனடா நாட்டில் உள்ள 140-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடர்பு கொண்டு, தமிழ்ச் சொந்தங்களோடு உரையாற்றினார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோர்களுக்கு ஊக்கமளித்து, எளிதாக தொழில் தொடங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் 30 நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். 60 நாடுகளில் குறைந்த அளவு தமிழர்கள் வசிக்கிறார்கள். அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார். அயலக தமிழர் நல வாரியத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் அனைவரும் உறுப்பினராக வேண்டும். அப்படி உறுப்பினரானால், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்து தருவார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல, அகில உலகத்திலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் கல்வி பயில சகோதரி கனிமொழி எனும் அம்மையார் வாரத்திற்கு 2 நாட்கள் தமிழ் பயிற்றுவிக்கிறார். 

அதற்கான அத்தனை வசதிகளையும் முதலமைச்சர் செய்து தந்துள்ளார்கள். அதேபோல தென்னாப்பிரிகாவிலும் ஏற்பாடு செய்ய முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன். பிறநாடுகளில், பிறமாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் படித்திருப்பார்கள். தமிழ்நாட்டில் அப்படி அல்ல. எல்லா சமூகத்தினரும் படித்திருப்பார்கள். அங்கு சாதி, மத வேறுபாடுகள் இருக்காது. 

பாரதப் பிரதமர் மோடி ஒன்றை சொன்னார்கள். இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கையை 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக ஆக்குவோம் என்றார். இப்போது இந்தியாவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 34 சதவீதம். அதே சமயம், தமிழ்நாட்டில் படித்தவர்களின் விகிதம் 51 சதவீதம். இன்னொரு புள்ளி விவரத்தையும் சொல்கிறேன். பெண்களில் படித்தவர்கள் சராசரி இந்திய அளவில் 26 சதவீதம். ஆனால், தமிழ்நாட்டில் 72 சதவீத பெண்கள் படித்திருக்கிறார்கள். இதற்கு காரணம், மறைந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஒரு காலத்தில் பெண்களை படிக்க அனுமதிக்க மாட்டார்கள். 5 வயதில் திருமணம் முடித்து வைத்துவிடுவார்கள். கணவன் இறந்து விட்டால், மொட்டை அடித்து வீட்டுக்குள் அடைத்து வைப்பார்கள். ஆனால், திராவிட இயக்கங்கள் அதை மாற்றி, பெண்களுக்கு சமஉரிமை பெற்று தந்தன. கலைஞர் ஆட்சியில் இருந்தபோது, பெண்களுக்கு 8 ஆம் வகுப்பு வரை படித்தால், 6 ஆயிரம் ரூபாய், 10 வரை படித்தால் 10 ஆயிரம் ரூபாய், 12 வரை படித்தால் 25 ஆயிரம் ரூபாய் என்று உதவித் தொகை அளித்து, பெண்கள் அனைவரையும் படிக்க வைத்தார்.

இப்போது நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த திட்டத்தை மாற்றி, புதுமைப் பெண் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அதன்படி, பெண்கள் பட்டப்படிப்பில் சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு சட்டப்பேரவைத் தலைவர் உரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory