» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:03:44 PM (IST)
கீரிப்பாறையில் தரைப்பாலம் உடைந்ததால் 10 கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மலையோர கிராமங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறையில் அரசு லேபர் காலனிக்கு செல்வததற்கு தரைப்பாலம் உள்ளது. கடந்த 2 தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாகஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தரைப்பாலத்தில் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக கோதையாறு, மோதிரமலை, குற்றியார் போன்ற மலையோர பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள தரை பாலங்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் 10 கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால் அந்த பகுதி மக்கள் வேலைகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் அவதி படுகிறார்கள்.
கடந்த 4 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது. இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. அவற்றில் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.