» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி : 3 பேர் மீது வழக்குப்பதிவு

புதன் 31, மே 2023 11:39:34 AM (IST)

புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள நாட்டுவள்ளி பகுதியை சேர்ந்தவர் சஜின், முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (39). இவருடைய தாய் மாமா பரமேஸ்வரன் (60). இவரது சொந்த ஊர் திருப்பூர். தற்போது நீலகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் சித்ரா டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி அரசு வேலைக்காக காத்திருந்தார். இதை அறிந்த பரமேஸ்வரன், 'அரசு துறைகளில் அதிகாரிகளை எனக்கு நன்றாக தெரியும். எனவே பணம் கொடுத்தால் உனக்கு எளிதாக வேலை வாங்கித் தருகிறேன். மேலும் உனக்கு தெரிந்த வேறு நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கலாம்' என ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய சித்ரா, பரமேஸ்வரனிடம் பணம் கொடுத்துள்ளார். மேலும், தனது கணவரின் உறவினர்கள் 4 பேரிடமும் வேலை கிடைக்கும் எனக்கூறி பணம் வாங்கி பரமேஸ்வரனுக்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு கூகுள் பே மூலம் பல தவணையாக ரூ.29 லட்சம் வரை பரமேஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் சித்ரா உள்பட யாருக்கும் இதுவரை வேலை கிடைக்கவில்லை.

இதையடுத்து பொறுமை இழந்த சித்ரா பணத்தை திரும்ப கேட்க தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் அவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சித்ரா குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். அதன் பேரில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் பரமேஸ்வரன் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. இந்த மோசடியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவருடைய மனைவி சுகாசினி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பரமேஸ்வரன் உள்பட 3 பேர் மீதும் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோசடியில் ஈடுபட்ட பரமேஸ்வரன் மின்வாரியத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory