» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழி ஆகும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு

சனி 25, மார்ச் 2023 5:08:12 PM (IST)



மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நிலை வரும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக வழக்குகளை விரைவாக முடிக்க முடியும். நீதித்துறை கட்டமைப்பில் தி.மு.க.அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது. புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம். 

3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜு பேசியதாவது: இந்தியாவில் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு சவால்கள் நம் முன்பாக உள்ளன. நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிற நாடுகளில் நீதிபதிகள் மிகவும் சவுகரியமாக வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 5,6 வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.

அதனால் ஏற்படும் மன அழுத்தம் அதிகம். சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. வழக்குகள் முடியும் அதே நேரத்தில் இரு மடங்கு வழக்குகள் புதிதாக தாக்கலாகின்றன. அதனால் தான் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உரிய நீதி வழங்கப்படும் போது, நீதிமன்றங்கள் மீதான சாமானியரின் நம்பிக்கை உயர்கிறது.

நீதிமன்றத்தில் மொழி, மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதி மன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும். இந்திய மொழிகள் நீதி மன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களும் எளிதாக அணுகும் வகையில் நீதிமன்ற கட்டமைப்பு விரைவில் அமையும்.

பொதுமக்கள் காவலர்களை பார்த்தால் அச்சப்படும் விதமாக இருக்கக் கூடாது. பாதுகாப்பாக உணர வேண்டும். அதே போல் பொதுமக்கள் நீதி மன்றத்தை எளிதில் அணுகும்படி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory