» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் : ஆளுநருக்கு அன்புமணி வேண்டுகோள்!

செவ்வாய் 28, ஜூன் 2022 3:38:34 PM (IST)

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அன்றைய தினமே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.

ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு கடந்த 2 வாரமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்படும் விளைவுகள் உயிரிழப்புகள், குறித்து ஆராய்ந்து தனது அறிக்கையினை நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தது.

71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் திறன்கள் மேம்படுவதாகச் சொல்லப்படுவது தவறானது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைவிதிக்க அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக ஆளுநர் இச்சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் 2009ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின் 2014ம் ஆண்டில் அவை இந்தியாவுக்குள் நுழைந்தன. 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் லட்சக்கணக்கானோர் இந்த தீமைக்கு அடிமையாயினர். 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரை 60க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அதற்கு பிறகு 10 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தற்போது தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை இன்றைக்குள் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரது ஒப்புதலை உடனடியாக பெற்று அரசிதழில் வெளியிட வேண்டும். பாமகவின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த மே 31ம் தேதி தமிழக ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசிய நான், ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும், அதனால் நிகழும் தற்கொலைகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினேன். ஆன்லைன் சூதாட்டங்களால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து ஆளுனரும் கவலை தெரிவித்தார்.

எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய சமூகத் தீமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காகப் போராட்டங்களை பாமக முன்னெடுக்கும்” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory