» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடையில்லை என அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்: சீமான்

திங்கள் 16, மே 2022 10:29:30 AM (IST)

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "கள்ளக்குறிச்சியிலுள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வெழுதச் சென்ற மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் சென்னை, தாம்பரத்திலுள்ள சங்கர வித்யாலயா பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்குச்சென்ற பெண்ணின் ஹிஜாப்பை, அப்பள்ளி நிர்வாகம் அகற்றக்கோரிய நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியிலும் அதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியிருப்பது தேவையற்ற சலசலப்பை உருவாக்குகிறது.

உடலில் பூணூல் அணிந்துசெல்வதற்கும், நெற்றியில் திருநீறு பூசிச்செல்வதற்கும், கையில் கயிறு அணிந்துசெல்வதற்கும், ருத்திராட்சை அணிந்துசெல்வதற்கும் கல்விக்கூடங்கள் எவ்விதத் தடையுமிடாதபோது, இசுலாமியர்களின் ஹிஜாப் உடைக்கு மட்டும் தடையிடுவது எதனால்? எல்லோரும் அவரவரது மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குக் கல்விக்கூடங்கள் அனுமதிக்கும்போது இசுலாமியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சமத்துவமற்ற அணுகுமுறை இல்லையா?.

ஹிஜாப் அணிந்துகொண்டு தெர்வெழுதச்செல்வதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் பெருமக்கள், ஹிஜாப் அணிந்துகொண்டு வாக்குச்செலுத்தும்போது எதிர்ப்புத் தெரிவிக்காததேன்? அப்போது ஹிஜாப் உடை சிக்கலாகப்படவில்லை; இப்போது மட்டும் கண்ணை உறுத்துகிறதா? இசுலாமியர்களின் வாக்கு இனிக்கிறது; அவர்களது உரிமை கசக்கிறதா? 

அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பெரும் மதப்பூசலை உருவாக்கி, சமூக அமைதியைக் குலைத்து, மதவெறியாட்டமாடியதன் விளைவாக, ஏறக்குறைய 33,000 மாணவிகள் தேர்வெழுத இயலாதுபோன பெரும் அவலமானது நிகழ்காலச்சாட்சியாக இருக்கும் நிலையில், அத்தகைய கோரச்சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாவண்ணம் தடுத்து, மதவெறிக்கூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory