» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடை! இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கேள்வி

சனி 14, மே 2022 12:10:28 PM (IST)

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத் தனத்தை உத்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் அந்நிகழ்வே ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டதுமான செயல்பாடுகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல! உணவுப்பழக்க வழக்கம் என்பது தனிப்பட்ட அவரவர் விருப்புரிமை சார்ந்தது; அதில் அரசோ, அரசியல் இயக்கங்களோ தலையிட்டு, இடையூறுசெய்வது என்பது அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

மாட்டிறைச்சி என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக்க சுவையான நல்லதொரு உணவாகும். அது உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் உடல்வலுவுக்கான சத்துமிக்க இறைச்சி உணவெனப் பரிந்துரைக்கப்பட்டு, எல்லாத்தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்பட்டு வரும் நிலையில், இந்திய ஒன்றியத்தில் அதற்கு மதச்சாயம் பூசி, முத்திரை குத்தி, அதனை உண்ணக்கூடாதென்றும், சந்தைப்படுத்தக் கூடாதென்றும் தடைகோரும் இந்துத்துவ இயக்கங்களின் செயல்பாடுகளும், நிலைப்பாடுகளும் கடும் கண்டனத்திற்குரியது. 

மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்திய ஒன்றியம் முன்னிலையில் இருக்குமளவுக்கு வெளிநாடுகளுக்கு அதனை அனுப்பி வைக்கிறது ஆளும் பாஜக அரசு; இதில் இசுலாமிய, கிருத்துவ நாடுகளும்கூட உள்ளடக்கம்! ஊரார்களுக்கு மாட்டிறைச்சியை ஊட்டிவிட்டு, அதன்மூலம் வருவாய் ஈட்டி அந்நியச்செலாவணி பெறும் பாஜக அரசு, உள்ளவர்களுக்கு தடைவிதித்து கிடுக்கிப்பிடிப் போடுவது நகைமுரணில்லையா? இங்கு மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைகோரும் பெருமக்கள், ஒன்றிய அரசு செய்யும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு எதிராக வாய்திறப்பார்களா? அதற்கெதிராகப் போராடத்துணிவார்களா? மாட்டிறைச்சியை விற்பனைசெய்யும் பெருநிறுவனங்களிடம் தேர்தல் நன்கொடைபெற்றுக்கொண்டே, மாட்டிறைச்சியை உண்ணக் கூடாதெனக்கூறி, பாஜகவினர் செய்யும் அட்டூழியங்கள் அற்பத்தனமான இழி அரசியலில்லையா?

மாட்டிறைச்சி என்பது வெகுமக்களின் உணவுப்பழக்க வழக்கங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போன தற்காலத்தில், இந்துத்துவ இயக்கங்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுப்பதும், வேறு வழியற்ற நிலையில், அந்நிகழ்வையே நிறுத்த விளைவதுமான திமுக அரசின் வஞ்சகப்போக்குகள் வெட்கக்கேடானது. ஆரிய மேலாதிக்கத்தின் வெளிப்பாடான பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்குக்கூட நாணமின்றி அனுமதியளிக்கும் திமுக அரசு, மாட்டிறைச்சி உணவுக்கு அனுமதி மறுப்பதும், இந்துத்துவ இயக்கங்களின் கோரிக்கைக்கு செவிமடுத்தது போல, அந்நிகழ்வையே நிறுத்த உத்தரவிடுவதும்தான் சனாதன இருளைக் கிழிக்கும் விடியல் ஆட்சியா? 

பசு மடம் அமைத்து, மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடை விதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்! ஆகவே, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மாறாக, மாட்டிறைச்சி உணவுக்கு முற்றாக அனுமதி மறுப்பதுதான் திமுக அரசின் கொள்கை முடிவென்றால், மாட்டிறைச்சி உணவோடு கூடிய உணவுத்திருவிழாவை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என அறிவிப்பு செய்கிறேன். வ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

truthமே 16, 2022 - 04:42:29 AM | Posted IP 162.1*****

Stupid people are taking the country backwards

நல்ல தம்பிகள் அவர்களேமே 14, 2022 - 04:38:52 PM | Posted IP 162.1*****

அதை அப்படியே சுடலையிடம் கேட்கவும்

நல்ல தம்பிகள்மே 14, 2022 - 02:17:53 PM | Posted IP 162.1*****

உனக்கு வேற வேலையே இல்லையா. நீ காமெடி பண்ணிக்கிட்டு நாடகம் மாதிரி பேசுகிறாய். தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவி புரியலாமே ? நீ எங்கே செலவு பண்ணபோகிறாய் . அப்பாவி தம்பிகளிடம் ஏமாற்றி வசூலிக்கிறாய்.

hgjhமே 14, 2022 - 01:25:35 PM | Posted IP 162.1*****

maadu than paavam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory