» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய குடும்ப அட்டைகளுக்கு ஆகஸ்ட் முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிறு 25, ஜூலை 2021 4:39:24 PM (IST)

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த மூன்று லட்சம் பேர் வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து கடைகளில் ரேசன் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மே 15, 2021 முதல், முதல் தவணையாக ரூ.2000/- மற்றும் ஜுன் 15, 2021 முதல் ரூ.2000/- ஆக மொத்தம்  ரூ.4000/- உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப் பொருள்கள் வழங்கிடும் பொருட்டு  14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையினை ஜுன் 15 ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. 

99 சதவீதத்திற்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பினைப் பெற்றுள்ள நிலையில், இதுவரை பெறாதோர் 31.07.2021க்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் 31.07.2021க்குள் பெற இயலாத, 15.06.2021 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 01.08.2021 முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாயவிலைக் கடையிலிருந்தே வழங்கும் முறை பின்பற்றப்படும். 

நிகழும் 2021ஆம் ஆண்டு மே 10 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சற்றேறக்குறைய மூன்று லட்சம் மனுதாரர்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இக்குடும்ப அட்டைதாரர்கள் 01.08.2021 முதல் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேசன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதலால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் 2021 ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து இன்றியமையாப் பொருட்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம். 

அட்டைதாரர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று தீரும் வரை முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியினைப் பின்பற்றி, அவசியத் தேவையின்றிப் பொது வெளிக்கு வராமல் தங்களையும் காத்து சமூகத்தினையும் காத்து கரோனா தொற்றினை வென்றிடுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory