» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:18:12 PM (IST)

தமிழக அரசு தற்போது வெளியிட்டு வரும் அறிவிப்புக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 6 சவரன் வரை பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தான் சொல்லித்தான் அரசு அறிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது தவறு. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்வதால் தான் நாங்கள் அதைச் செய்வதாகக் கூறுவது தவறான பிரசாரம். அரசு  அறிவிக்க உள்ளவற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஸ்டாலின் அதனை அறிவித்து விடுகிறார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் 75 சதவீத விவசாயிளுக்கு வழங்கப்பட்டு விட்டது.  அரசியல் அறிவிப்புகளுக்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எந்த மாநிலமும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. அனைத்து மாநில அரசுகளும் கடன் வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்துகின்றன. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, அதனால் வாங்கப்படுகிறது. திமுக ஆட்சியிலும் கடன் பெற்றே திட்டங்களை நிறைவேற்றினார்கள்.

2011ல் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக ஸ்டாலினே சொல்கிறார். அது 10 ஆண்டுகளில் உயர்ந்து விலைவாசிக்கேற்ப தற்போது 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. வேளாண் கடன் தள்ளுபடிக்காக என்றைக்காவது திமுக குரல் கொடுத்துள்ளதா? ஆனால் வேளாண் கடன் தள்ளுபடி என்பதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த திமுக முயற்சி செய்கிறது.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடன் வாங்காத மாநிலமே இல்லை. தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை நிறைவேற்றுவோம் என்று உறுதிப்படுத்தியுள்ளோம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு சாமானிய மக்களின் தேவை என்ன என்பது குறித்து நன்கு தெரியும். இ-டெண்டரில் எப்படி முறைகேடு செய்ய முடியும்? மின்னணு முறையில் நடைபெறும் டெண்டரில் ஊழல் செய்ய வாய்ப்பே இல்லை என்று முதல்வர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory