» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பெண்கள் பலி - 19பேர் காயம்!

வெள்ளி 26, பிப்ரவரி 2021 9:00:06 AM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பெண்கள் உடல்கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 19பேர் படுகாயம் அடைந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது, காளையார்குறிச்சி கிராமம். இந்த ஊரில், மங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை 50 அறைகளுடன் இயங்கி வந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. நேற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஆலையில் வேலைபார்த்து வந்தனர். மாலை 4.30 மணி அளவில் திடீரென பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசுகள் வெடித்து சிதறின. 

இதைதொடர்ந்து அருகில் இருந்த 15-க்கும் மேற்பட்ட அறைகளில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் 5 அறைகள் தரைமட்டமானது. 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தன. அந்த இடம் முழுவதும் தீ பரவி எரிந்தது. வெடிவிபத்து ஏற்பட்டவுடன் பலர் காயம் அடைந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடினார்கள். சிலர் காயத்துடன் சம்பவ இடத்திலேயே போராடினார்கள் இந்த வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் 1 மணி நேரத்துக்கு மேலாக பட்டாசுகள் வெடித்து கொண்டே இருந்ததால், அதன் பின்னரே தீயணைப்பு வாகனங்கள் ஆலையின் உள்ளே செல்ல முடிந்தது. மேலும் விருதுநகரில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. காயம் அடைந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வெடி விபத்தில் 5 பட்டாசு அறைகள் தரைமட்டமானதால் அதன் இடிபாடுகளுக்குள் யாராவது தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்களா? என அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் தேடினர். இதற்காக எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

அவ்வாறு அகற்றிய போது 2 அறைகளில் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு அறையில் 2 பெண்கள் உடல்கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். ஆனால், அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்களது உடல்கள் சிதைந்து போய் இருந்தன. மற்றொரு அறையின் இடிபாடுகளுக்கு உள்ளேயும் 2 பெண்கள் உடல்கள் புதைந்து கிடந்தன. பலியான 4 பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் மொத்தம் 19 தொழிலாளர்கள் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது. வெடி விபத்தில் 4 பெண்கள் உடல் கருகி பலியான நிலையில், அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. வெடிவிபத்தில் இறந்தவர்கள் யார்? என்று தெரியாமல் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் கதறி அழுதபடி தங்களது உறவினர்களை தேடினர். பின்னர், காயம் அடைந்தவர்களின் பட்டியலில் பெயர் இல்லாத தங்களது உறவினர்களை தேடினர். இந்த பரிதவிப்பு ஆஸ்பத்திரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவகாசி அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந்தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தால் ஏற்பட்ட சோகம் இன்னும் தீராத நிலையில் மேலும் ஒரு சம்பவமாக நேற்று நடந்த சம்பவம் அமைந்துள்ளது. எம்.புதுப்பட்டி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விதிமீறல்கள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரியவருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thalir Products


Thoothukudi Business Directory